குழந்தையை வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக வீசிய இளம்பெண்- போலீசார் தீவிர விசாரணை
தகாத உறவில் பிறந்த பச்சிளம் குழந்தையை வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக வீசிய இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.;
மும்பை,
தகாத உறவில் பிறந்த பச்சிளம் குழந்தையை வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக வீசிய இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
குழந்தை பிணம் மீட்பு
நவிமும்பை உல்வே செக்டார் 21 பகுதியில் பச்சிளம் குழந்தை பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை உடல் குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
அப்போது அருகில் உள்ள கட்டிடத்தின் 2-வது மாடியில் உள்ள வீட்டின் கழிவறை ஜன்னலில் கண்ணாடி இல்லாமல் இருப்பதை போலீசார் பார்த்தனர். போலீசார் அந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஜன்னல் வழியாக வீசிய இளம்பெண்
அப்போது வீட்டில் இருந்த 19 வயது இளம்பெண் தான் குழந்தையை கழிவறை ஜன்னல் வழியாக வீசியது தெரியவந்தது. இளம்பெண் யவத்மாலை சேர்ந்தவர் ஆவார். உல்வேயில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வீட்டு வேலை செய்து வந்து இருக்கிறார். இளம்பெண்ணுக்கு உறவுக்கார வாலிபர் ஒருவருடன் தகாத உறவு இருந்து இருக்கிறது. இதனால் அவர் கர்ப்பமாகி உள்ளார். ஆனால் இளம்பெண்ணின் வயிறு பெரிதாகவில்லை. இதனால் யாருக்கும் அவர் மீது சந்தேகம் வரவில்லை.
சம்பவத்தன்று இளம்பெண்ணுக்கு பிரசவ வலி வந்து இருக்கிறது. இதையடுத்து கழிவறைக்கு சென்ற அவர், குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசியது தெரியவந்து உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இளம்பெண் தற்போது வாஷி மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகாத உறவில் பிறந்த குழந்தையை கழிவறை ஜன்னல் வழியாக இளம்பெண் வீசிய சம்பவம் நவிமும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.