தனியார் வங்கியில் ரூ.12 கோடி கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளி கைது

மான்பாடாவில் தனியார் வங்கியில் ரூ.12 கோடி கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளியை புனேயில் வைத்து போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-10-06 00:15 IST

தானே,

மான்பாடாவில் தனியார் வங்கியில் ரூ.12 கோடி கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளியை புனேயில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

பணம் கொள்ளை

தானே மான்பாடாவில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் பாதுகாவலராக மும்ராவை சேர்ந்த அல்டாப் சேக் (வயது43) என்பவர் வேலை செய்து வந்தார். வங்கியின் லாக்கர் சாவி அவரிடம் இருந்தது. சம்பவத்தன்று இந்த வங்கி லாக்கரில் இருந்த ரூ.12 கோடி பணம் கொள்ளை போனது. இந்த சம்பவத்திற்கு பிறகு பாதுகாவலர் அல்டாப் சேக் தலைமறைவாகி விட்டார்.

இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், அலாரம் சிஸ்டம், கண்காணிப்பு கேமரா மற்றும் கணினியில் இருந்த சிஸ்டத்தை செயலிழக்க செய்து பணத்தை ஏ.சி. குழாய் வழியாக கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

சகோதரி சிக்கினார்

தானே மற்றும் நவிமும்பை போலீசார் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க விசாரணை நடத்தினர். இதில் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன்பேரில் அப்ரார் குரோஷி (வயது33), அகமது கான்(33), அனுஜ் கிரி(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், அல்டாப் சேக்கின் சகோதரி நிலோபர் என்பவருக்கும் கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவரது வீட்டில் நடத்திய சோதனையில் கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பகுதி இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

புனேயில் பிடிபட்டார்

இதனை தொடர்ந்து போலீசார் அவரது சகோதரி நிலோபரை கைது செய்து முக்கிய குற்றவாளியான அல்டாப் சேக்கை பிடிக்க விசாரித்து வந்தனர். இந்தநிலையில் அவர் புனேயில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 3-ந்தேதி போலீஸ் குழுவினர் அங்கு சென்று தலைமறைவாக இருந்த அல்டாப் சேக்கை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.9 கோடியை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் பலருக்கு தொடர்பு இருப்பதால் அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்