சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதே தற்போதைய ஆட்சியாளர்களின் கொள்கை- சரத்பவார் குற்றச்சாட்டு

சாதி, மதம், மொழியை வைத்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதே தற்போதைய ஆட்சியாளர்களின் கொள்கை என பா.ஜனதா மீது சரத்பவார் குற்றம் சாட்டினார்.;

Update:2023-08-18 00:15 IST

பீட், 

சாதி, மதம், மொழியை வைத்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதே தற்போதைய ஆட்சியாளர்களின் கொள்கை என பா.ஜனதா மீது சரத்பவார் குற்றம் சாட்டினார்.

பொதுக்கூட்டம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைந்ததால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து கட்சியின் தேசிய தலைவர் சரத்பவார் கட்சியை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் தொண்டர்களை சந்தித்து வருகிறார். அவர் நேற்று அஜித்பவார் அணிக்கு தாவிய மந்திரி தனஞ்செய் முண்டேவின் சொந்த மாவட்டமான மராட்டிய மாநிலம் பீட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சமூகத்தில் விரிசல்

பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று அங்கு மக்களின் வலியை புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்ய தவறிவிட்டார்.

சாதி, மதம் மற்றும் மொழி போன்றவற்றை கருவியாக வைத்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதே தற்போதைய ஆட்சியாளர்களின் கொள்கையாக உள்ளது.

மத்தியில் நிலையான ஆட்சியை வழங்குவது குறித்து பா.ஜனதா கட்சி பேசிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அதேநேரம் அவர்கள் மாநிலத்தில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை உடைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பட்னாவிசை பின்பற்றும் மோடி

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என்று கூறியதன் மூலமாக, தனது கட்சியின் தலைவர்களில் ஒருவரான தேவேந்திர பட்னாவிசின் அடிச்சுவடுகளை அவர் பின்பற்றுகிறார்.

மராட்டியத்தில் 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என்று அறிவித்தார். ஆனால் அது பொய்யாகி விட்டது. அதேநிலை தான் பிரதமர் மோடிக்கும் ஏற்படும்.

அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக உரங்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் படும் துயரம் குறித்து அரசாங்கம் சிறிதும் கவலைப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்