போலீசாருக்கு பயந்து அடுக்குமாடியில் இருந்து குதித்த திருடன் பலி

மும்பையில் போலீசாருக்கு பயந்து அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்த திருடன் பரிதாபமாக உயிரிழந்தான்.;

Update:2022-07-09 19:21 IST

மும்பை, 

மும்பையில் போலீசாருக்கு பயந்து அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்த திருடன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மாடியில் ஏறிய திருடன்

மும்பை மெரின் டிரைவ் டி-ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு நேற்று அதிகாலை 5 மணியளவில் திருடன் ஒருவன் வந்தான். அவன் கட்டிடத்தின் கழிவுநீர் குழாயை பிடித்து மேலே ஏறினான். இந்தநிலையில் திருடன் கட்டிடத்தின் பக்கவாட்டு சிலாப்பில் 'பல்லி' போல பதுங்கி இருந்ததை கட்டிட காவலாளி பார்த்தார்.

உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். மேலும் தீயணைப்பு துறையினரும் சென்றனர்.

இதற்கிடையே திருடனை பார்க்க பொது மக்களும் கட்டிடத்தை சூழ்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் திருடனை காப்பாற்ற தீயணைப்பு துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் திருடன், யாராவது பக்கத்தில் வந்தால், குதித்துவிடுவேன் என மிரட்டினான். எனவே திருடனை பத்திரமாக வருமாறு தீயணைப்பு துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

மீட்க முயற்சி

எனினும் அவர் பக்கவாட்டில் சிலாப்பில் இருந்து வர மறுத்துவிட்டார். எனவே அவர் கீழே விழுந்தால் காப்பாற்றும் வகையில் கீழே சிலர் வலை விரித்து நின்றனர். சுமார் 2½ மணி நேரமாக பொது மக்களும், தீயணைப்பு துறையினரும் திருடனிடம் பத்திரமாக இறங்கி வருமாறு கெஞ்சினர். எனினும் அவர் வரமாட்டேன் என பிடிவாதமாக இருந்துவிட்டார். சிலர் வீட்டில் உணவு தருவதாகவும் கூறினர்.

அப்போதும் திருடன் கட்டிடத்தில் சுமார் 3 அடி அகலம் மட்டுமே உள்ள பக்கவாட்டு சிலாப்பை விட்டு நகரவில்லை. மழை பெய்து சிலாப் வழுவழுப்பாக இருந்ததால் திருடன் தவறி விழுந்து விடுவானோ என மக்கள் பயந்தனர்.

கட்டிடத்தில் இருந்து குதித்து பலி

இந்தநிலையில் கீழே விரிக்கப்பட்ட வலை மூலம் தன்னை பிடிக்க போலீசார் திட்டம் போட்டு இருப்பதாக திருடன் நினைத்ததாக தெரிகிறது. எனவே அவன் சுமார் 25 அடி தள்ளி குதித்தான். அப்போது அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்தின் சுவரின் மீது விழுந்தான். இதில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக திருடன் அருகில் உள்ள ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். எனினும் அவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தான். முதல் கட்ட விசாரணையில் பலியான நபரின் பெயர் ரோகித் (வயது26) என்பது மட்டும் தெரியவந்தது. அவர் இந்தி, பெங்காலி பேசியதாக போலீசார் கூறினர். போலீசாருக்கு பயந்து திருடன் மாடியில் இருந்து குதித்த சம்பவத்தால் மெரின் டிரைவ் பகுதியில் நேற்று முன்தினம் காலை பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்