அரிவாளால் தாக்கி அண்ணனை கொன்ற தம்பிக்கு வலைவீச்சு
ஜவகர் தாலுகாவில் அரிவாளால் தாக்கி அண்ணனை கொன்ற தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வசாய்,
ஜவகர் தாலுகாவில் அரிவாளால் தாக்கி அண்ணனை கொன்ற தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிவாளால் தாக்குதல்
பால்கர் மாவட்டம் ஜவகர் தாலுகா சமிலிபாடா பகுதியை சேர்ந்தவர் பங்கஜ் (வயது21). வசாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது சகோதரர் நிவ்ருதி வாஜே(19). இந்தநிலையில் பங்கஜ் நேற்று முன்தினம் வீட்டருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த சகோதரர் நிவ்ருதி வாஜே திடீரென தான் வைத்திருந்த அரிவாளால் பங்கஜின் கழுத்தில் தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.
இதில் படுகாயமடைந்த பங்கஜ் ரத்த வெள்ளத்தில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதனை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
தம்பிக்கு வலைவீச்சு
அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்த ஜவகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய நிவ்ருதி வாஜேயை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் கொலைக்கான காரணம் குறித்து அவர்களது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த அண்ணனை தம்பியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.