எங்கள் முதுகில் குத்தினார்கள்: புதிய அரசை அமைத்து சிவசேனாவுக்கு தக்க பதிலடி கொடுத்தோம்- ஜே.பி. நட்டா பேச்சு
எங்களது முதுகில் குத்திய சிவசேனாவுக்கு, புதிய அரசு அமைத்து தக்க பதிலடி கொடுத்தோம் என்று பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா கூறினார்.;
மும்பை,
எங்களது முதுகில் குத்திய சிவசேனாவுக்கு, புதிய அரசு அமைத்து தக்க பதிலடி கொடுத்தோம் என்று பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா கூறினார்.
ஜே.பி. நட்டா வருகை
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு சவாலாக இருக்கும் தொகுதிகளை கண்டறிந்து, அங்கு மக்களை சந்திக்கும் 'விஜய் சங்கல்ப்' நிகழ்ச்சியை அந்த கட்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் மராட்டியத்தில் 18 நாடாளுமன்ற தொகுதிகள் பா.ஜனதாவுக்கு கடினமானதாக கண்டறியப்பட்டு உள்ளது.
இதில் சந்திராப்பூர் தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தக்க பதிலடி
மராட்டியத்தில் கடந்த சட்டசபை தேர்தலின் போது நம்முடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட சிவசேனா கட்சி நமது முதுகில் குத்தியது. அதிகாரத்துக்காக தனது கொள்கையை சமரசம் செய்த அந்த கட்சி, மராட்டிய கலாசாரத்தை புண்படுத்தி வரும் மற்றும் இந்திய கலாசாரத்தை புரிந்து கொள்ள மறுத்தவர்களுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் தஹி ஹண்டி விழாக்களை அவர்கள் தடுத்தனர். ஆனால் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமைத்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம்.
பணிந்த உத்தவ் தாக்கரே
தேர்தலின் போது டெல்லியில் நரேந்திர மோடி, மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ் என்று தெரிவித்து இருந்தோம். அதற்கு சிவசேனா ஒப்புக்கொண்டு இருந்தது. ஆனால் அதிகார பேராசைக்காக பா.ஜனதாவை முதுகில் குத்தியவர்களை நாம் மன்னிக்க வேண்டுமா?. இயற்கைக்கு மாறான அவர்களது கூட்டணி கவிழ்ந்து விட்டது.
2020-ம் ஆண்டில் பால்கரில் 3 துறவிகள் அடித்து கொல்லப்பட்டனர். அந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ. வசம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் இந்துத்வா கொள்கைவாதியான பால்தாக்கரேயின் மகன் (உத்தவ் தாக்கரே), அந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்காமல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அழுத்தத்திற்கு பணிந்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.