ராய்காட் அருகே கனமழையால் சோகம் - மலைக் கிராமத்தில் நிலச்சரிவு; 16 பேர் பலி

ராய்காட் அருகே கனமழையால் மலை கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலியானார்கள். மேலும் பலர் மண்ணில் புதைந்து இருப்பதாக கருதப்படும் நிலையில் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.;

Update:2023-07-21 00:15 IST

மும்பை, 

ராய்காட் அருகே கனமழையால் மலை கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலியானார்கள். மேலும் பலர் மண்ணில் புதைந்து இருப்பதாக கருதப்படும் நிலையில் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

கனமழையால் நிலச்சரிவு

மராட்டியத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 2 நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் மழை இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. புனே, ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. மும்பை நகரமும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. குறிப்பாக தானே, ராய்காட், புனே ஆகிய மாவட்டங்களில் ஒரேநாளில் 20 செ.மீ.-க்கும் அதிக மழையளவு பதிவானது. இந்தநிலையில் பேய் மழையை கண்ட ராய்காட் மாவட்ட மலைக்கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள காலாப்பூர் தாலுகா இர்சல்வாடி மலைக்கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவை நெருங்கும் வேளையில் இந்த துயரம் நேர்ந்தது.

மண்ணில் புதைந்த மக்கள்

இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இரவு 11 மணி அளவில் அனைவரும் தூங்கிவிட்ட நிலையில் திடீரென மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையடிவாரத்தில் இருந்த வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. மேலும் சில வீடுகள் நிலச்சரிவில் பலத்த சேதம் அடைந்தன. இதில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த கிராம மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர். தகவல் அறிந்து மீட்பு படையினர் இர்சல்வாடி கிராமத்துக்கு விரைந்தனர். நிலச்சரிவில் புதைந்த மலை கிராமத்துக்கு நேரடி சாலை வசதி கிடையாது. எனவே மீட்பு படையினர் மும்பை - புனே நெடுஞ்சாலையில் உள்ள சவுக் கிராமத்துக்கு வாகனங்கள் மூலம் சென்றனர். பின்னர் அங்கு இருந்து சில கி.மீ. தூரம் கரடு, முரடான மலைப்பாதையில் ஏறி, இர்சல்வாடிக்கு சென்றடைந்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

16 பேர் பிணமாக மீட்பு

அவர்கள் பலத்த மழையிலும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மந்திரிகள் உதய் சாமந்த், கிரிஷ் மகாஜன் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கொட்டும் மழையில் நனைந்தப்படி மீட்பு பணியை ஆய்வு செய்தார். இந்தநிலையில் நேற்று மாலை வரை மீட்பு படையினர் மண்ணில் புதைந்த 16 பேரை பிணமாக மீட்டனர். மேலும் பலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் மோசமான வானிலை காரணமாக மாலை 6 மணியுடன் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பவம் நடந்த கிராமத்தில் 50 வீடுகள் உள்ளன. அதில் 17 வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டன. 75 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என கருதுகிறோம். இன்று காலை மீட்பு பணி மீண்டும் தொடங்கும்" என்றார். மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், "இர்சல்வாடி பழங்குடியின கிராமம். சரியான தார் சாலை வசதி இல்லாததால் மீட்பு பணிக்கு பெரிய எந்திரங்களை வரவழைக்க முடியவில்லை. இதனால் மீட்பு பணி பெரும் சவாலாக உள்ளது" என்றார்.

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-

தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள்

நிலச்சரிவு அபாய பட்டியலில் உள்ள ஊர்களில் இந்த மலைக்கிராமம் இல்லை. இருப்பினும் துயரம் நேர்ந்து விட்டது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பது தற்போது எங்களுக்கு முக்கியம். நிலச்சரிவில் 15 முதல் 20 அடி உயரத்துக்கு மண் குவிந்து உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 2 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவை பயன்படுத்தப்படவில்லை. இந்த கிராமத்தில் 103 பேர் வசித்து வந்து உள்ளனர். சிலர் விவசாய வேலையில் ஈடுபட வெளியூர் சென்று உள்ளனர். பல குழந்தைகள் ஆசிரம பள்ளியில் தங்கி படிப்பதும் தெரியவந்து உள்ளது.

தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் துரிதகதியில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே நிலச்சரிவு தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்