பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: தையல்காரரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது

பூட்டிய வீட்டுக்குள் தையல்காரர் பிணமாக கிடந்த வழக்கில், அவரை கொலை செய்ததாக மனைவி, கள்ளக்காதலனுடன் போலீசில் சிக்கினார்.;

Update:2022-07-20 18:37 IST

மும்பை, 

பூட்டிய வீட்டுக்குள் தையல்காரர் பிணமாக கிடந்த வழக்கில், அவரை கொலை செய்ததாக மனைவி, கள்ளக்காதலனுடன் போலீசில் சிக்கினார்.

பூட்டிய வீட்டுக்குள் பிணம்

மும்பை சாக்கிநாக்கா கைரானி ரோடு பகுதியை சேர்ந்த தையல்காரர் நசீம்கான் (வயது22). இவரது மனைவி ரூபினா. சமீப நாட்களாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நசீம் கானை பார்க்க அவரது தந்தை தானேயில் இருந்து வந்தார். அங்கு வீடு பூட்டி கிடந்த நிலையில் துர்நாற்றம் வீசியது.

இதன்பேரில் போலீசாரின் உதவியுடன் பூட்டை உடைத்து பார்த்த போது நசீம்கான் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவருடன் வசித்து வந்த மனைவி ரூபினா தலைமறைவானது தெரியவந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளத்தொடர்பு

பிரேத பரிசோதனையில் அவர் தலையில் தாக்கப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ரூபினாவை தேடி வந்தனர். மேலும் அவரது செல்போனில் உள்ள அழைப்புகளை சோதனை நடத்தினர்.

இதில் நசீம்கானின் பக்கத்து வீட்டை சேர்ந்த சேப் கான் என்ற வாலிபருடன் ருபினா அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சேப் கானை பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

ரூபினாவிற்கும், தனக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை சேப் கான் ஒப்புக்கொண்டார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

கொலை

இது பற்றி அறிந்த நசீம்கான், மனைவி ருபினாவை கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சண்டை ஏற்பட்டதால் ருபினா அருகே கிடந்த கம்பியால் அவரது தலையில் தாக்கினார். இதில் நசீம்கான் சுருண்டு விழுந்தார். பின்னர் பயந்து போன ரூபினா கள்ளக்காதலன் சேப்கானை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரும்படி அழைத்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து வீட்டை பூட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சேப் கானை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி பதுங்கி இருந்த ருபினாவை போலீசார் பிடித்து கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்