உத்தவ் தாக்கரே அரசு பரிந்துரை செய்த 12 எம்.எல்.சி.க்கள் பட்டியலை ரத்து செய்தார், கவர்னர்
ஏக்நாத் ஷிண்டே எழுதிய கடிதத்தை அடுத்து உத்தவ் தாக்கரே பரிந்துரை செய்த 12 நியமன எம்.எல்.சி.க்கள் பட்டியலை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ரத்து செய்தார்.;
மும்பை,
ஏக்நாத் ஷிண்டே எழுதிய கடிதத்தை அடுத்து உத்தவ் தாக்கரே பரிந்துரை செய்த 12 நியமன எம்.எல்.சி.க்கள் பட்டியலை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ரத்து செய்தார்.
2½ ஆண்டுகள் மவுனம் சாதித்த கவர்னர்
மராட்டிய மேல்-சபைக்கு கலை, இலக்கியம், சமூகசேவை, அரசியல், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 12 எம்.எல்.சி.க்களை கவர்னர் நியமனம் செய்வார். இதற்காக கடந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சியில் 12 பேர் பெயர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்த பட்டியலில் மூத்த அரசியல் தலைவர் ஏக்நாத் கட்சே (தேசியவாத காங்கிரஸ்), நடிகை ஊர்மிளா மடோங்கர் (சிவசேனா) உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.
முந்தைய அரசின் இந்த பட்டியலை காங்கிரஸ் தலைவர் அமித் தேஷ்முக், சிவசேனாவின் அனில் பரப், தேசியவாத காங்கிரசின் நவாப் மாலிக் ஆகியோர் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் 2020-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி ஒப்படைத்தனர். ஆனால் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இந்த பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கவே இல்லை.
இதுதொடர்பாக மகாவிகாஸ் அகாடி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை. ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டும் கவர்னர் கடைசி வரை 12 எம்.எல்.சி.க்கள் விவகாரத்தில் செவி சாய்க்காமல் மவுனம் சாதித்தார்.
இந்தநிலையில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் மகாவிகாஸ் அகாடி ஆட்சி கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி அணி, பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது.
உத்தவ் பரிந்துரை பட்டியல் ரத்து
கடந்த வாரம் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பரிந்துரை செய்த 12 நியமன எம்.எல்.சி.க்கள் பெயர் பட்டியலை திரும்ப பெற விரும்புவதாகவும், எனவே அந்த பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் புதிய பெயர் பட்டியலை விரைவில் சமர்பிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரே அரசு பரிந்துரை செய்த 12 நியமன எம்.எல்.சி.க்கள் பெயர் பட்டியலை ரத்து செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக மூத்த மந்திரி ஒருவர் கூறுகையில், "உத்தவ் தாக்கரே சமர்பித்த 12 நியமன எம்.எல்.சி.க்கள் பட்டியலை திரும்ப பெறுவதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த வாரம் கவர்னருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து ராஜ் பவன் அந்த பட்டியலை முதல்-மந்திரி அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பி உள்ளது. கவர்னரின் இந்த முடிவு மூலம் புதிதாக 12 பேரை எம்.எல்.சி.க்களாக பரிந்துரை செய்ய முடியும்" என்றார்.
காங்கிரஸ் எதிர்ப்பு
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் மந்திரி விஜய் வடேடிவார் கூறுகையில், "மேல்-சபைக்கு முந்தைய அரசு செய்த பரிந்துரையை, மாநில அரசு திரும்ப பெறுவது தவறு" என்றார்.
தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறுகையில், "ஷிண்டே அரசின் அரசியலமைப்பு சாசன அங்கீகாரம் கேள்விக்குறியாக உள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் 12 எம்.எல்.சி.க்கள் நியமன பட்டியலை கவர்னர் ரத்து செய்துள்ளார்.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. மேலும் பா.ஜனதா- ஷிண்டே அணிக்கு கூடுதல் தலைவர்களை இழுக்கும் முயற்சி" என்றார்.
-----------------