கர்நாடகத்தில் மராத்தி அதிகம் பேசும் பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு, உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
கர்நாடகத்தில் மராத்தி அதிகம் பேசும் பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.;
நாக்பூர்,
கர்நாடகத்தில் மராத்தி அதிகம் பேசும் பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
எல்லைப் பிரச்சினை
கர்நாடகத்தில் உள்ள பெலகாவி, நிப்பாணி உள்ளிட்ட மராத்தி மொழி பேசும் பகுதிகளை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மராட்டியம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
எல்லைப் பிரச்சினையில் மோதல் காரணமாக சமீப நாட்களாக இருமாநில எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் நேற்று மராட்டிய மேல்-சபை கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே இந்த பிரச்சினையை எழுப்பி பேசினார். அப்போது அவர் மராட்டியம் உரிமை கோரும் பகுதிகளை "கர்நாடக ஆக்கிரமிப்பு மராட்டியம்" என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது:-
யூனியன் பிரதேசம்
கர்நாடக எல்லையோர கிராமங்களில் தலைமுறை, தலைமுறையாக மராத்தி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அன்றாட வாழ்க்கை, மொழி மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவற்றில் மராத்தி அங்கம் வகிக்கிறது.
இது மொழி மற்றும் எல்லை தொடர்பான பிரச்சினை மட்டும் இல்லை. மனிதநேயம் சார்ந்தது. இந்த எல்லைப் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை முடியும் வரை, கர்நாடகாவில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை மத்திய அரசு யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்.
சூழ்நிலையை கெடுப்பது யார்?
எல்லை பிரச்சினை தொடர்பு வழக்கு நிலுவையில் இருக்கும் போது அண்டை மாநிலத்திற்கு ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பெலகாவியை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என்று அந்த மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியபோது, மாநகராட்சி மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எல்லைப் பிரச்சினையில் சூழ்நிலையை கெடுப்பது யார்?
அதேவேளையில் மராட்டியத்தில் சில கிராம பஞ்சாயத்துகள் தெலுங்கானாவுடன் இணைக்க கோரியிருந்தன. இந்த கிராம பஞ்சாயத்துகளுக்கு எதிராக செயல்பட ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு கொஞ்சம் கூட தைரியம் இல்லாதது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.