ஏக்நாத் ஷிண்டே அணியினர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை அபகரிக்க கூடும்- மோகன் பகவத்துக்கு, உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
ஏக்நாத் ஷிண்டே அணியினர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை அபகரிக்க கூடும் என மோகன் பகவத்துக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
மும்பை,
ஏக்நாத் ஷிண்டே அணியினர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை அபகரிக்க கூடும் என மோகன் பகவத்துக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்.க்கு எச்சரிக்கை
முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மும்பையில் நேற்று எங்களது கட்சி அலுவலகத்தை கைப்பற்ற முயற்சி நடைபெற்றுள்ளது. இன்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு சென்றார். ஆர்.எஸ்.எஸ். வலுவாக இருப்பதால் அதன் அலுவலகத்தை அவரால் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் இனிமேல் ஆர்.எஸ்.எஸ். விழிப்புடன் இருக்க வேண்டும். அவருடைய (ஏக்நாத் ஷிண்டே) தீய கண்கள் அதன் மீது குறி வைத்து இருக்க கூடும். எனவே மோகன் பகவத் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
எதையும் புதிதாக கட்டி எழுப்பும் தைரியம் இல்லாதவர்கள் திருடவோ அல்லது கைப்பற்றவோ முயற்சி செய்கின்றனர். அவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். அவர்கள் மற்றவர்களின் கட்சிகள், அலுவலகங்களை திருடுகிறார்கள்.
கவர்னர் பதவி
மும்பையை உடைத்து யூனியன் பிரதேசமாக மாற்றவேண்டும் என்ற பா.ஜனதாவின் சதியை கர்நாடகாவை சேர்ந்த அந்த கட்சியின் மந்திரியே வெளிப்படுத்தி உள்ளார். மராட்டிய அடையாளங்களை அவமதித்த கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி விலக வேண்டும்.
சத்ரபதி சிவாஜி, சாவித்திரிபாய் புலே, மகாத்மா புலே ஆகியோரை அவமதித்தவர்கள் எப்படி பதவியில் நீடிக்க முடியும்?
இந்த குளிர்கால கூட்டத்தொடரில் விதர்பாவின் வளர்ச்சி திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படவில்லை. அரசு வெறும் அறிவிப்புகளையோ அல்லது ஒரு தொகுப்பையோ அறிவிக்காமல் விதர்பாவின் வளர்ச்சி திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை சொல்ல வேண்டும்.
மந்திரி உதய் சமந்த், அப்துல் சத்தார் மற்றும் பிறருக்கு எதிரான முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? அவர்களின் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?.
இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.