உத்தவ் தாக்கரேயின் பேச்சு கீழ்த்தரமானது- பட்னாவிஸ் தாக்கு
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பேரன் குறித்த உத்தவ் தாக்கரேவின் பேச்சு கீழ்த்தரமானது என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.;
மும்பை,
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பேரன் குறித்த உத்தவ் தாக்கரேவின் பேச்சு கீழ்த்தரமானது என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
உத்தவ் பேச்சு
சிவசேனா கட்சி 2-ஆக பிளவு பட்டுள்ள நிலையில் வழக்கமாக நடத்தப்படும் சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டம் மும்பை சிவாஜி பூங்காவில் உத்தவ் தாக்கரே தலைமையிலும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பேரணி பி.எம்.சி. மைதானத்திலும் 2 இடங்களில் நடைபெற்றது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசிக்கொண்டனர்.
அப்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது உரையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் மகனான எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டேவை ஒரு ஏமாற்று பேர்வழி என்று கூறியதுடன், அவரது ஒன்றரை வயது பேரனையும் விமர்சிக்கும் வகையில் பேசியதாக தெரிகிறது.
அதிருப்தி அளிக்கிறது...
இவரின் பேச்சுக்கு எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்கள் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பேரனை குறிப்பிட்டு கருத்து தெரிவிப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இது மிகவும் கீழ்த்தரமானது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பகிரங்கமாக தனது வார்த்தைகளை திரும்ப பெறவேண்டும்.
மராட்டியத்தில் ஒன்றரை வயது குழந்தையை பற்றி கருத்து தெரிவித்தால் நாம் எங்கே செல்கிறோம்? இதுபோன்ற கருத்துகளுக்கு நான் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
வீண் முயற்சி
மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளுக்கு இடையே இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது. ஆனால் இது அனைத்தும் வீணான முயற்சி தான். பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயத்தில் வாழ்க்கிறார்" என்றார்.