ஷிண்டே அணியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா செல்ல தயாராக உள்ளனர்- உத்தவ் தாக்கரே அணி 'திடுக்' தகவல்

ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா செல்ல தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே அணி தெரிவித்துள்ளது.;

Update:2022-10-25 00:15 IST

மும்பை, 

ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா செல்ல தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே அணி தெரிவித்துள்ளது.

பா.ஜனதா செல்லும் எம்.எல்.ஏ.க்கள்

சிவசேனா கட்சி 2 அணியாக செயல்பட்டு வருகிறது. இதில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் பா.ஜனதா செல்ல தயாராக இருப்பதாக சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஷிண்டே அணியில் உள்ள 22 எம்.எல்.ஏ.க்கள் புதிய அணியை அமைப்பார்கள். அந்த அணி பா.ஜனதாவுடன் இணையும். ஷிண்டே - பா.ஜனதா அரசு ஒரு தற்காலிக ஏற்பாடு தான். ஷிண்டே எந்த நேரமும் முதல்-மந்திரி பதவியில் இருந்து இறக்கப்படுவார். பா.ஜனதாவை சேர்ந்தவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார். ஏக்நாத் ஷிண்டே மற்றொரு ராம்தாஸ் அத்வாலே போல மாறுவார் என பா.ஜனதா தலைவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் அவர்கள் வெளிப்படையாகவே ஷிண்டே பா.ஜனதாவில் இணையும் காலம் வரும் என்கிறார். அப்போது ஷிண்டே பா.ஜனதாவின் மற்றொரு நாராயண் ரானே ஆவார்.

ஷிண்டே - பட்னாவிஸ் மோதல்

ஷிண்டேவுக்கு டெல்லியில் எந்த செல்வாக்கும் கிடையாது. எந்த வேலைகள் நடந்தாலும் துணை முதல்-மந்திரி தேவந்திர பட்னாவிசுக்கு தான் பெயர் கிடைக்கிறது. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் உயர் போலீஸ் அதிகாரி நியமனத்தில் மோதல் ஏற்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் பேச்சை கேட்கவில்லை. இதனால் கடுப்பான ஷிண்டே, சத்தாராவுக்கு சென்றுவிட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்