உத்தவ் சிவசேனாவுடன், வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி
மாநகராட்சி தேர்தல்களை முன்னிட்டு உத்தவ் பாலாசாகேப் சிவசேனா, வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு உள்ளன.;
மும்பை,
மாநகராட்சி தேர்தல்களை முன்னிட்டு உத்தவ் பாலாசாகேப் சிவசேனா, வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு உள்ளன.
கூட்டணி அறிவிப்பு
மும்பை, தானே, புனே உள்ளிட்ட பல முக்கிய மாநகராட்சிகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இருப்பினும் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்து வருகிறது.
இந்தநிலையில் மறைந்த சிவசேனா கட்சியின் நிறுவனர் பால்தாக்கரேவின் பிறந்தநாளை முன்னிட்டு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தங்கள் கட்சி வரும் தேர்தல்களில் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடியுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
ஒன்றிணைந்த வாரிசுகள்
பிரபோதங்கர் தாக்கரே என்று அழைக்கப்படும் எனது தாத்தா கேசவ் தாக்கரே மற்றும் பிரகாஷ் அம்பேத்கரின் தாத்தா சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் இருவரும் சமகாலத்தவர்கள். இருவரும் சமூக சீர்கேடுகள் மற்றும் தீய பழக்க வழக்கங்களை ஒழிக்க உழைத்தவர்கள்.
இப்போது அரசியலில் சில மோசமான நடைமுறைகள் புழக்கத்தில் உள்ளது. அவற்றை ஒழிக்க இரு தலைவர்களின் வாரிசுகளும், அவர்களைச் சுற்றியுள்ள மக்களும் ஒன்றிணைந்துள்ளனர். நாட்டின் நலனை பாதுகாக்க, ஜனநாயகம் உயிருடன் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் ஒன்றுபடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணி பற்றி பேசிய வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், "வஞ்சித் பகுஜன் அகாடியுடன், உத்தவ் பாலாசாகேப் சிவசேனா இணைவது ஒரு அரசியல் மாற்றத்தின் தொடக்கம்" என்றார்.
உள்ளாட்சி தேர்தலையோட்டி தலித்துகளின் வாக்குகளை ஒருங்கிணைக்க உத்தவ் தாக்கரே மேற்கொண்ட முயற்சியாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.