குடிநீர் வெட்டு அமல் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு- மக்கள் அவதி

ஒரு மாதத்திற்கு குடிநீர் வெட்டு அமல் காரணமாக மும்பையில் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.;

Update:2023-04-06 00:15 IST

மும்பை, 

ஒரு மாதத்திற்கு குடிநீர் வெட்டு அமல் காரணமாக மும்பையில் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

குடிநீர் வெட்டு

மும்பை பாண்டுப் பகுதியில் மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளது. இங்கு இருந்து நகருக்கு 65 சதவீதம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மையத்திற்கு 15 கி.மீ நீள ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தானேயில் சாலை தோண்டும் பணியின்போது ராட்சத குடிநீர் குழாயில் சேதம் அடைந்து கசிவு ஏற்பட்டது.

இதனை சரி செய்யும் பணி காரணமாக கடந்த 31-ந் தேதி முதல் ஒரு மாதத்திற்கு 15 சதவீதம் குடிநீர் வெட்டு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பற்றாக்குறையால் அவதி

இந்தநிலையில் மும்பையின் மேற்கு புறநகர் பகுதிகளான ஜோகேஸ்வரி, கோரேகாவ் பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதைத்தவிர கொலாபா, காட்கோபர், கார், காந்திவிலி மற்றும் சாந்திவிலி போன்ற பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதால் பொதுக்குழாய்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் நிரப்பி சென்று வருகின்றனர்.

குடிநீர் வெட்டு 15 சதவீதத்திற்கு பதிலாக 80 சதவீதமாக இருப்பதாகவும், சில பகுதிகளில் தண்ணீர் வினியோகம் முற்றிலும் கிடைக்கவில்லை எனவும், போதுமான அழுத்தத்தை எட்ட கூடுதல் எந்திரங்களை பயன்படுத்தி சீரான குடிநீர் வினியோகம் செய்யும்படி அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்