காரின் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் இன்று முதல் 'சீட்' பெல்ட் அணிவது கட்டாயம்

மும்பையில் காரின் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் இன்று முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகிறது.;

Update:2022-11-01 00:15 IST

மும்பை, 

மும்பையில் காரின் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் இன்று முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகிறது.

'சீட் பெல்ட்' கட்டாயம்

மும்பையில் 4 சக்கர வாகனங்களில் பின் சீட்டில் அமர்ந்து இருக்கும் பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று சமீபத்தில் மும்பை போலீசார் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த உத்தரவு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. காரில் பின் சீட்டில், சீட் பெல்ட் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

சமீபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சிக்கி பலியானார். காரின் பின் இருக்கையில் பயணித்த அவர் சீட் பெல்ட் அணியாததால், முன் இருக்கை மீது அவரது தலைமோதி உயிரிழந்தார் என்று தெரிவந்தது. இந்த சம்பவத்தை அடுத்து மும்பை போலீசார் 4 சக்கர வாகனங்களில் பின் இருக்கைகளில் அமர்பவர்களும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.

விலக்கு கோரிக்கை

போலீசாரின் இந்த உத்தரவுக்கு மும்பை டாக்சி டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக அவர்கள் பின் சீட்டில் இருப்பவர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற உத்தரவில் இருந்து டாக்சிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டு உள்ளனர்.

இது குறித்து மும்பை போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விழிப்புணர்வு

4 சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் நடவடிக்கை எடுக்கும்போது சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சீட் பெல்ட் அணியாத டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பின் இருக்கைகளில் சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். பின் இருக்கையில் விரைவில் சீட் பெல்ட் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கார் உரிமையாளர்களை கேட்டுக்கொண்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்