புனே,
புனே சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து விமானம் ஒன்று புனே விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பெண் பயணியின் உடைமைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்காததால் பயணியை தனிஅறைக்கு அழைத்து சென்று சோதனை போட்டனர். உடலில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கேப்சூல்கள் இருந்ததை கண்டனர். இதில் 270 கிராம் எடையுள்ள தங்கபேஸ்ட்டை கேப்சூலில் மறைத்து கடத்தி இருந்ததை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அப்பெண்ணை புனே விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை கைது செய்து தங்கம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.