பாபா ராம்தேவுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

பெண்கள் அழகை பற்றி சர்ச்சை கருத்து கூறிய பாபா ராம்தேவுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.;

Update:2022-11-27 00:15 IST

மும்பை, 

பெண்கள் அழகை பற்றி சர்ச்சை கருத்து கூறிய பாபா ராம்தேவுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சர்ச்சை கருத்து

தானேயில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசுகையில், "பெண்கள் புடவையில், சல்வார் கமீசிலும் அழகாக இருக்கிறார்கள். எனது பார்வையில் அவர்கள் ஒன்றும் அணியாவிட்டாலும் அழகாக தெரிகிறார்கள்" என்றார்.

பாபா ராம்தேவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மராட்டிய மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

மகளிர் ஆணையம் நோட்டீஸ்

இந்த நிலையில் பாபா ராம்தேவுக்கு மராட்டிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பெண்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு 3 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி மாநில பெண்கள் ஆணைய தலைவி ரூபாலி கூறுகையில், "பாபா ராம்தேவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் பெண்கள் மீதான அவரது சிதைந்த மனநிலையை காட்டுகிறது. யோகா மூலம் அவர் சமூகத்திற்கு நிதானம் மற்றும் ஆரோக்கியம் பற்றி சொல்லும் அதேவேளையில் பெண்கள் பற்றிய அநாகரீக கருத்துகள் வெட்கக்கேடானது. பெண்களின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் கெடுக்கும் வகையில் பேசியது தொடர்பாக அவர் மீது எங்களுக்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளோம்" என்றார்.

இதற்கிடையே பாபா ராம்தேவுக்கு கண்டனம் தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மும்பை பிரிவு கட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவரது உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இதே போல தானேயிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மேலும் செய்திகள்