அதிகாரிகளை கண்டித்து இளம்பெண்கள் ஆர்ப்பாட்டம்

தகிசரில் நடந்த தீயணைப்பு படை பிரிவுக்கான ஆட்சேர்ப்பு முகாமில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-02-05 00:15 IST

மும்பை, 

தகிசரில் நடந்த தீயணைப்பு படை பிரிவுக்கான ஆட்சேர்ப்பு முகாமில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சேர்ப்பு முகாம்

மும்பை தகிசர் பகுதியில் தீயணைப்பு படை பிரிவில் பெண்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக நடந்து வரும் இந்த முகாமில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளம்பெண்கள் கலந்துகொண்டனர். நேற்று முன்தினம் முகாமில் கலந்துகொண்ட இளம்பெண்களுக்கு உயரம் சரிபார்ப்பு நடந்தது.

இதில் நிர்ணயிக்கப்பட்ட 162 செ.மீ.க்கு குறைவான உயரம் கொண்டவர்கள் நிராகரிக்கப்பட்டனர். மேலும் அதிக உயரம் கொண்டவர்களையும் அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

போலீசார் தடியடி

இது ஆட்சேர்ப்பு முகாமில் ஆர்வமுடன் கலந்து கொண்ட இளம்பெண்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிகாரிகளுக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சேர்ப்பு முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து செல்லும்படி இளம்பெண்களிடம் தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் போலீசார் தேர்வர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.

இந்த சம்பவத்தில் சில பெண்களின் கால்கள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் அங்கு நடந்த ஆட்சேர்ப்பு முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்