வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்களுக்கு மணப்பெண் கிடைப்பதில்லை- சரத்பவார் குற்றச்சாட்டு

வேலையில்லாததால் இளைஞர்களுக்கு மணப்பெண் கிடைப்பதில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கவலை தெரிவித்தார்.;

Update:2023-01-06 00:15 IST

மும்பை, 

வேலையில்லாததால் இளைஞர்களுக்கு மணப்பெண் கிடைப்பதில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கவலை தெரிவித்தார்.

வேலையில்லாத திண்டாட்டம்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புனேயில் அந்த கட்சியின் 'ஜன் ஜகர் யாத்திரை' பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நமது விவசாயிகள் உற்பத்தியை அதிகரித்தால் நாட்டின் பசி பிரச்சினையை தீர்க்க வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் விவசாயிகளுக்கு அவர்களுக்கான வருவாயை கொடுக்க தயாராக இல்லை. அவர்கள் இடைநிலை தரகர்கள் நலனை பாதுகாத்து வருகின்றனர். சாமானிய மக்களை விலைவாசி உயர்வில் தள்ளுகின்றனர்.

இன்றைய இளைஞர்கள் படித்து உள்ளனர். அவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கேட்க உரிமை இருக்கிறது. மராட்டியத்துக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளை தக்க வைக்க கூட ஆர்வம் காட்டப்படவில்லை. இதன் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

திருமணத்துக்கு மணப்பெண் கிடைப்பதில்லை

சமீபத்தில் நான் சுற்றுபயணம் சென்ற போது, ஒரு கிராமத்தில் 25 முதல் 30 வயது மதிக்கதக்க சுமார் 20 வாலிபர்கள் பொது இடத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டு இருந்தனர். அவர்களிடம் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என கேட்டேன். சில வாலிபர்கள் பட்டப்படிப்பு முடித்து இருப்பதாகவும், சிலர் முதுகலை பட்டம் படித்து இருப்பதாகவும் கூறினார்கள்.

திருமணம் முடிந்துவிட்டதா என அவர்களிடம் கேட்டேன். அங்கு இருந்த ஒருவருக்கு கூட திருமணம் ஆகவில்லை என்றார்கள். ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என கேட்டேன். வேலையில்லாததால் யாரும் பெண் தரவில்லை என கூறினர். இதுபோன்ற புகார்கள் ஊரகப்பகுதிகளில் தான் அதிகம் வந்தது.

சாதி, மதத்தை வைத்து பிளவு

வேலை வாய்ப்பை உருவாக்க திட்டம் போடுவதை விட்டு, சாதி மற்றும் மதத்தை வைத்து பிளவை ஏற்படுத்தவே முயற்சிகள் நடக்கின்றன. இருபிரிவினர் இடையே வெறுப்பை தூண்ட தொடர்ந்து சில பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. அவர்கள் ஏன் இதை செய்கிறார்கள்?.

ஏனெனில் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்