மாவட்ட செய்திகள்
ஐ.சி.எஸ்.ஐ. நிறுவனத்துடன் புதுச்சேரி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐ.சி.எஸ்.ஐ. நிறுவனத்தோடு புதுவை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
புதுச்சேரி,

புதுவை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் வணிக துறை சார்ந்த மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு டெல்லியில் இயங்கி வருகின்ற இந்திய பட்டய செயலாளர்கள் நிறுவனத்தோடு (ஐ.சி.எஸ்.ஐ.) புதுவை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளள.

இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தின் நிர்வாகக்குழு வளாகத்தில் துணைவேந்தர் குர்மீத்சிங் முன்னிலையில் நடந்தது. தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் (பொறுப்பு) சித்ரா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

நிகழ்ச்சியில் இந்திய பட்டய செயலாளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல இணை செயலாளர் சாரா ஆரோக்கிய சாமி, துணை இயக்குனர் சித்ரா அனந்தராமன், பல்கலைக்கழக பதிவாளர் சசிகாந்த தாஸ், நிதி அதிகாரி பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் வணிகவியல் (பி.காம்) பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் அல்லது மாணவிக்கு இந்திய பட்டய செயலாளர்களுக்கான நிறுவனத்தின் சார்பில் 10 கிராம் தங்க பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்படும். அதோடு பல்கலைக்கழக தேர்வில் முதல் 3 இடங்களுக்குள் தகுதிபெறும் மாணவர்கள் இந்திய பட்டய செயலாளர்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கல்வி பதிவு கட்டணத்திலும் விலக்களிக்கப்படும்.