வித்தியாசமான விஞ்ஞானிகள் : அச்சுக்கலையை அறிமுகம் செய்த கூட்டன்பர்க்

இந்த உலகிற்கு அச்சுக்கலையை அறிமுகப்படுத்தியவர் ஜோகனன் கூட்டன் பர்க் என்பவராவார். 1398-ல் ஜெர்மனியில் உள்ள மெயின்ஸ் என்ற இடத்தில் அவர் பிறந்தார்.;

Update:2019-02-01 17:41 IST
அவரது மாமா உலோகங்களை உருக்கி உருவங்களைச் செய்யும் வார்ப்பு வேலையை செய்து வந்தார். கூட்டன்பர்க் அவருடன் இருந்து அந்த வேலையில் ஈடுபட்டு தேர்ச்சியும் பெற்றார். அதன்பின்னர் கண்ணாடிகளையும், கற்களையும் பட்டை தீட்டுகின்ற பயிற்சியில் தன்னை ஈடுபடுத்தினார். அந்த நேரத்தில்தான் அவர் மனதில் அச்சு இயந்திரங்களைப் பற்றிய சிந்தனைகள் தோன்றின. அதற்கு சில சம்பவங்களும் காரணமாக இருந்தன.

வெள்ளை நிறத்தாள்கள் இல்லாத காலம் அது. நன்கு பதப்பட்ட ஆட்டுத் தோலும், கன்றுக்குட்டியின் தோலுமே தாள்கள் போன்று பயன்படுத்தப்பட்டன. அதே நேரம் சீனாவிலும், கொரியாவிலும் அச்சடிக்கும்முறை வேறு மாதிரியாக இருந்தது. அவர்கள் பலகைகளில் செய்திகளை செதுக்கி அச்சடித்து வந்தனர். அவர்களது சிக்கலான எழுத்துகள் சிறப்பினைத் தரவில்லை.

காலமாற்றத்தில் சீனாவில் காகிதத்தாள் பழக்கத்திற்கு வந்தது. காகிதம் செய்யும் முறை அரேபியாவுக்கு சென்று ஐரோப்பியாவுக்கும் பரவியது. இதன் விளைவாக தாளில் எழுதும் பழக்கத்திற்கு வந்தனர். ஒருவரே தொடர்ந்து பல நாட்கள் எழுதித்தான் புத்தகம் தயாரித்தனர். அவர் எழுதி முடிக்கின்ற புத்தகம் விலை மதிப்பில்லாதது. அந்தப் புத்தகங்களை ஏழைகள் எவரும் நெருங்க முடியாது. பணக்காரர்களோ பெரிய வைரங்களை வைத்திருப்பதுபோன்று புத்தகங்களை வைத்திருந்தனர்.

இந்த கால கட்டத்தில் கூட்டன் பர்க் மரப்பலகைகளில் எழுத்துகளை செதுக்கி அவைகளின் மீது மையினைப்பூசி படிகளை எடுத்தார். இப்படி செய்வதின் மூலமாக கால நேரம் வீணானது. ஒரு முறை மட்டுமே அது பயன்பட்டது. எனவே தாமதமாகும் நிலையை மாற்றி வேகமாக அச்சடிப்பது பற்றி சிந்தித்தார்.

எழுத்துக்களை தனித்தனியாக தயாரித்து அவைகளை இணைத்து சொற்களாக மாற்றினார். இதன் காரணமாக அதே எழுத்துகளை மறுபடியும் பயன்படுத்திடலாம். அவைகளைக் கொண்டு அச்சடித்திடலாம் என்பதை உறுதி செய்தார். இதை செயல்படுத்த தனது நேரத்தையெல்லாம் செலவு செய்தார். பணமும் கடனாக வாங்கினார்.

முதலில் மரத்தால் எழுத்துகளை தயாரித்தார். அவைகள் சீக்கிரமாக தேய்ந்துவிடவே உலோகத்தினைப் பயன்படுத்தினார். அவர் பயன்படுத்திய உலோகமான காரீயமும் விரைவில் உருமாற்றம் அடையவே இரும்பை பயன்படுத்தினார். அது எழுத்துகளோடு பொருந்தவில்லை. முடிவில் ஒரு உலோக கலவையை உருவாக்கினார். அதற்கு அவர் சிறுவயதில் தன் மாமாவுடன் பணியாற்றிய வார்ப்பு வேலை அனுபவங்கள் கைகொடுத்தன.

தான் உருவாக்கிய அச்சு எழுத்துக்களைக்கொண்டு ஒரு பக்கத்தில் அச்சு கோர்த்தார். அதன் மேல் தாள் வைத்து பலமாக அழுத்தினால்தான் தெளிவான அச்சு கிடைத்திடும் என்பதை உணர்ந்தார். அதற்கு அச்சடிக்கும் மை தேவைப்பட்டது. இத்தாலிய ஓவியர்கள் பயன்படுத்தும் மையினை தேடிக் கண்டுபிடித்த பயன்படுத்தினார். அவரிடம் இருந்த பணமெல்லாம் இதற்கு செலவு செய்யவே கரைந்து கொண்டிருந்தது. அவருக்கு மேலும் பொருளாதாரம் தேவைப்பட்டது.

இதற்கிடையே பைபிளை அச்சடிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது. உடனே அவர் தனது சொந்த ஊரான மெயின்ஸ் திரும்பினார். அங்கு பாஸ்ட் என்ற பெரும் பணக்காரரின் நட்பு அவருக்கு கிடைத்தது. அவரும் கூட்டன் பர்க்குவை நம்பினார். அவரது அச்சுக்கலை முயற்சியைப் பாராட்டி பணம் கடனாகக் கொடுத்தார்.

பைபிளை அச்சடிக்கும் திட்டத்தில் தன்னை ஒரு பங்குதாரராக நியமித்துக்கொண்டார். மூன்று வருடத்திற்குள் பைபிளை அச்சடித்து வெளியிடுவதாக திட்டம் வகுத்தனர். ஆனால் அந்த திட்டமானது தள்ளிப்போய்விட்டது. ஐந்தாண்டுகள் ஆன பின்பும் அந்த வேலை முடியவில்லை. பாஸ்ட் தனக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் போட்ட முதலாவது நமக்கு திருப்பிக் கிடைக்க வேண்டும் என முடிவு செய்தார். எனவே அவர் கூட்டன் பர்க்கின் மீது வழக்குப் போட்டார். முடிவில் பாஸ்ட் வெற்றி பெற்றார். கூட்டன் பர்க்கிடம் இருந்த அச்சுப்பொறியும் பொருட்களும் பாஸ்ட்க்கே சொந்தமாயின.

தன்னிடமிருந்த எல்லாவற்றையும் இழந்த கூட்டன் பர்க் தன் முயற்சியை கைவிடாமல் வேறு சிலரின் உதவிகளை நாடினார். இவரது அச்சுக்கலை படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. ஐரோப்பாவின் எல்லா நாடுகளுக்கும் பரவிச் சென்றது.

ஏழைகளுக்கு எட்டாத நிலையில் இருந்த புத்தகங்கள், எல்லோருக்கும் கிடைக்க கூட்டன்பர்க்கின் அச்சுக் கலையே காரணம். எல்லோரும் படிக்க ஆரம்பித்தனர். அறிவை வளர்த்துக் கொண்டனர். இன்றும் அறிவு வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களின் பின்னால் இருப்பது அச்சுக்கலையே.

இன்றைய எல்லாத்துறைகளின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமைந்தது அச்சுக்கலை எனலாம். அத்தகைய சிறப்புமிக்க அச்சுக்கலையை உருவாக்கித்தந்த கூட்டன்பர்க் 1468-ல் இவர் இயற்கை எய்தினார். இன்று அச்சுக்கலையில் லேசர், கிராபிக்ஸ் என்று நவீன மாற்றங்கள் பெற்றாலும் இவரது ஆரம்ப அரிய கண்டுபிடிப்பினையும், தியாகச் செயல்களையும் நினைத்துப்பாப்பது ஒவ்வொரு புத்தகப்பிரியர்களின் கடமையாகும். 

- கே.நல்லசிவம்.

மேலும் செய்திகள்