பள்ளியில் படிக்கவில்லை ஆனால் வாழ்க்கையை படித்தார்கள் ஒரு வித்தியாசமான குடும்பத்தின் விசித்திரமான வாழ்க்கை
ஜான் பேபியும்- மினியும் வித்தியாசமான பெற்றோர். அவர்கள் தங்கள் பிள்ளைகளான மினோன், மின்ட் இருவரையும் பாடம் படிக்க பள்ளிக்கு அனுப்பவில்லை.;
ஜான் பேபியும்- மினியும் வித்தியாசமான பெற்றோர். அவர்கள் தங்கள் பிள்ளைகளான மினோன், மின்ட் இருவரையும் பாடம் படிக்க பள்ளிக்கு அனுப்பவில்லை. அதற்கு பதிலாக நாட்டை சுற்றிப்பார்க்க தயார்ப்படுத்தினார்கள். ஊர், உலகத்தை புரிந்துகொண்டு விளையாடி மகிழ்ந்து அனுபவ கல்வியை பெறுங்கள் என்று கூறினார்கள். பிள்ளைகளோடு சேர்ந்து அவர்களும் புறப்பட்டுச் சென்றார்கள். ஊர்ஊராக சுற்றினார்கள். விழாக்களிலும், வேடிக்கையான சம்பவங்களிலும் பார்த்தவைகளை எல்லாம் வரையும்படி கூறினார்கள். கலைஞர்களை அறிமுகம் செய்துவைத்தார்கள். ஏராளமான சினிமாக்களை பார்த்து ரசிக்கவைத்தார்கள். ஆங்காங்கே சந்தித்த குழந்தைகளோடு சேர்த்து அவர்களையும் விளையாட அனுப்பினார்கள்.
குழந்தைகள் இருவருக்கும் அது முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களாக இருந்தன. வழக்கமாக எல்லா குழந்தைகளும் புத்தகபையோடு பள்ளிக்கு செல்வார்கள். இவர்களுக்கு புத்தகங்களை சுமக்கவேண்டிய சூழல் இல்லை. ஹோம் ஒர்க், பரீட்சை போன்ற எந்த கஷ்டங்களும் இல்லை. பிற்காலத்தில் நுழைவுத்தேர்வு எழுதி எதிர்காலத்தை நிச்சயிக்கவேண்டிய கட்டாயமும் ஏற்படவில்லை. ஜாலியாக அவர்கள் வாழ்க்கையை அனுபவித்தார்கள்.
மூத்தவன் மினோனுக்கு 19 வயது. இளையவள் மின்டுக்கு 16 வயது. மினோன் பத்து வயதிலே சினிமாவில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர். அதுவும் முதல் படத்திலே அந்த சாதனையை நிகழ்த்தினார். ‘101 சோத்யங்களாயிருந்து’ என்பது அந்த மலையாள படத்தின் பெயர். அதை தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கல்லூரி மாணவனாக ‘நான் பெற்ற மகனே’ என்ற சினிமாவில் தற்போது கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். அது கல்லூரி மாணவர் ஒருவரது நிஜ வாழ்க்கையை பின்னணியாகக் கொண்ட கதை. பள்ளிக்கும், கல்லூரிக்கும் படிக்கச் செல்லாத மினோன் இந்த படத்துக்காக பள்ளி காட்சியிலும், கல்லூரி காட்சியிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மினோன் இதர கலைகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருக்கிறார். 3 வயதிலேயே ஓவியம் வரையத் தொடங்கிவிட்டார். சிற்பங்கள் வடிவமைப்பதிலும் சிறந்து விளங்குகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்களை உருவாக்கியுள்ளார். அதைவைத்து கண்காட்சிகளும் நடத்தியுள்ளார். வகுப்பறைகளில் பாடம் படிக்காத இவர், கல்லூரி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளும் நடத்துகிறார். அவர் பாடப்புத்தகங்களில் இருந்து மேற்கோள்காட்டாமல், தான் சந்தித்த நபர்கள், தான் அனுபவித்த வாழ்வியல் விஷயங்களை யதார்த்த உண்மைகளோடு மாணவர்களுக்கு விளக்குகிறார்.
மின்டு நடனத்தில் மிகுந்த தேர்ச்சிபெற்றிருக்கிறார். பிரபல நாட்டிய கலைஞர் ஸ்ரீலட்சுமி கோவர்த்தனனிடம் இரண்டு ஆண்டுகளாக குச்சுப்புடி நடனமும் கற்றுக்கொண்டிருக்கிறார். இவர் நான்கு வயதில் இருந்தே பல்வேறு விதமான நடனங்களை கற்றுத் தேர்ந்திருக்கிறார். மின்டு தனது நாட்டியத்திறனை வெளிப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற விரும்பவில்லை. காலங்கடந்தாலும் ஒவ்வொன்றையும் ஆழமாக கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருக்கிறது. போட்டோ எடுப்பதிலும் மிகுந்த ஆர்வம் இருக்கிறது.
இவர்களது தந்தை ஜான் பேபி சீர்திருத்தவாதி. புரட்சிகரமான சிந்தனைகொண்டவர். மதரீதியான வழிபாடுகளில் ஈடுபாடு இல்லாதவர். வேலைக்காக படிப்பதில் அவருக்கு விருப்பம் இல்லாததால், பத்தாம் வகுப்போடு படிப்பிற்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டார். அவரது செயல்பாடுகளுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு இருந்தபோதும், தன் விருப்பப்படியே நடந்துகொண்டார். நிறைய பயணங்கள் மேற்கொண்டார். விவசாயம் செய்தார்.
திருமண வயது வந்ததும், அடுத்த பிரச்சினை ஆரம்பித்தது. தங்களது சம்பிரதாயங்களுக்கு உள்பட்டு அவருக்கு பெண்பார்க்கத் தொடங்கினார்கள். அவரோ தனது தனித்துவத்திற்கு ஏற்றவிதத்தில் பெண் தேட விரும்பினார். தான் விரும்புவதை போன்ற பெண்ணை தேர்ந்தெடுக்க அனுமதிக்காவிட்டால் தனக்கு திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டார். அதை தொடர்ந்து ஜான் பேபி விருப்பத்திற்கே பெற்றோர் விட்டுவிட்டார்கள். பின்பு அவர் தனது விருப்பங்களை எல்லாம் விளக்கமாக நாளிதழில் கூறி, ‘மணமகள் தேவை’ என்று விளம்பரம் செய்தார். விளம்பரத்திற்கு உடனே திருச்சூரில் மினியிடம் இருந்து பதில் வந்தது. மினியும் புரட்சிகரமான சிந்தனைகொண்டவர். பிரபலமான ஓவியர். இருவரும் சந்தித்தார்கள். ராகுகாலத்தில் திருமணமும் செய்துகொண்டு, புரட்சிகரமாக வாழ்க்கையை தொடங்கினார்கள். அவர்களது அன்புக் குழந்தைகள்தான் மினோனும், மின்டுவும்.
குழந்தைகள் பிறக்கும் முன்பே அவர்களை பள்ளிக்கு அனுப்பி படிக்கவைக்கப்போவதில்லை என்று அவர்கள் முடிவுசெய்துவிட்டார்கள். இருவருக்கும் நிறைய புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் உண்டு. அதனால் தங்கள் குழந்தைகளுக்காகவும் நிறைய புத்தகங்களை தேடிப்பிடித்து வாங்கிவைத்தார்கள். என்னதான் இருந்தாலும் அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தது, சமூகத்தில் அவர்களுக்கு கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது. கூடவே குழந்தைகளே, ‘நீங்கள் ஏன் எங்களை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தீர்கள்? என்று எதிர்காலத்தில் கேட்டுவிடக்கூடாது’ என்றும் பயந்தார்கள். அதனால் ‘உங்கள் பத்து வயது வரை நாங்கள் விரும்புவதுபோல் வளருங்கள். அதன் பின்பு உங்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் உருவாகிவிடும். பின்பு நீங்களாக பள்ளிக்கு செல்ல விரும்பினால் நாங்கள் தடுக்கமாட்டோம்’ என்று உறுதியளித்தார்கள்.
இவர்கள் வீடு பம்பை ஆற்றின் கரையில் இருக்கிறது. இயற்கை எழில்சூழ்ந்த அருமையான இடம். குழந்தைகள் ஆற்றில் குளித்து மகிழ்ந்து விளையாடும் நேரத்தில் தாய் அங்கே அமர்ந்து ஓவியங்கள் தீட்டுவார். தந்தை அருகில் இருந்து சிற்பங்கள் வடிப்பார். அவர்களை பார்த்து குழந்தைகளுக்கும் கலை ஆர்வம் உருவானது. மினோன் இரண்டு வயதிலே ஓவியம் வரையத் தொடங்கியிருக்கிறார்.
“வீட்டுச் சூழலில் இருந்துதான் நாங்கள் அடிப்படையான பாடங்களை கற்றோம். பள்ளிக்கூடம் சென்று படிக்கவில்லையே என்ற ஏக்கம் எங்களுக்கு வராத அளவுக்கு வீட்டுச்சூழலை பெற்றோர் உருவாக்கியிருந்தார்கள். பயணங்களை பெற்றோர்கள் எங்களுக்கு நிறைய உருவாக்கித்தந்தார்கள். பெற்றோர்களோடு நாங்கள் பயணம் செய்யத்தொடங்கிவிட்டால், பல வாரங்கள் கழித்துதான் வீடு திரும்புவோம். பொதுநிகழ்ச்சிகளில் முதல் வரிசையில் எங்களை உட்காரவைத்துவிடுவார்கள். அங்கு மேடையில் பார்க்கும் காட்சிகளை எல்லாம் ஓவியங்களாக வரையும்படி சொல்வார்கள். நாங்களும் ஆர்வமாக வரைவோம். பார்க்கிறவர்கள் எங்களை பாராட்டுவார்கள். மேடையில் இருப்பவர்களை பார்த்து எங்களுக்கும் மேடை ஏறும் ஆர்வம் வந்தது. பயணங்கள் செய்யும்போது போகிற இடங்களில் இருக்கும் போர்டுகளை காட்டித்தந்து எங்களுக்கு எழுத்துக்களை அறிமுகம் செய்தார்கள். இப்போதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுத்துக்களை படிக்கிறோம்” என்கிறார்கள், அண்ணனும், தங்கையும்.
‘பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு இருக்கிறதா?’ என்று இவர் களிடம் கேட்டபோது..
“எல்லோரும் முதலில் பள்ளிப்பாடத்தை படித்துவிட்டு, பின்பு வெளியே சென்று வாழ்க்கைப் பாடத்தை கற்பார்கள். நாங்கள் அப்படி அல்ல, வாழ்க்கையில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டோம். எது சரி என்பதை வாழ்க்கை அனுபவம் மூலம் எங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. நாங்கள் ஆடிப்பாடி, ஓவியம் வரைந்து மகிழ்ச்சியாக எங்கள் நாட்களை கழித்ததால் பள்ளிக்கு செல்லாத ஏக்கம் எதுவும் எங்களுக்கு தோன்றவில்லை. நாங்கள் பள்ளிக்கு செல்லாததால் எங்களுக்கு அரசு வேலை கிடைக்காது. அரசு வேலை பார்க்கவேண்டும் என்ற லட்சியமும் எங்களுக்கு இல்லை” என்கிறார்கள், இவர்கள். ஓலையில் சிற்பங்கள் உருவாக்கும் பணியில் ஜான் பேபியும், மினியும் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் பயிற்சியும் கொடுக்கிறார்கள்.