களத்தை கலக்குறாங்க...
“தங்கப்பதக்கத்தின் மேலே ஒரு முத்து பதித்தது போலே...” என்ற பாடல் ஒலிக்கிறது. எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடனம் ஆடுகிறார்கள்.;
“தங்கப்பதக்கத்தின் மேலே ஒரு முத்து பதித்தது போலே...” என்ற பாடல் ஒலிக்கிறது. எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடனம் ஆடுகிறார்கள்.
மற்றொரு இடத்தில் கரகரத்த கருணாநிதியின் குரல் கம்பீரமாக ஒலிக்கிறது.
இன்னொருபுறம் சினிமா பாடலுக்கு அருமையான நடனத்துடன் கமல்ஹாசன் ஓட்டு சேகரிக்கிறார். மற்றொரு இடத்தில் விஜயகாந்த் வசனம் பேசுகிறார்.
ஆங்காங்கே மோடியும் காணப்படுகிறார். சோனியாவையும் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் இந்த காட்சிகள் தற்போது தினமும் அரங்கேறிவருகின்றன.ஆனால் இவர்கள் எல்லாம் அசல்கள் அல்ல. நகல்கள்.
மேடைக்கலைஞர்களுக்கு இவ்வளவு திறமையா? என்று எண்ண வைக்கும் அளவுக்கு ‘அசலைப் போன்று இந்த நகலும்’ பாவனை காட்டுகிறார்கள்.
கோடை வெயில் சுட்டெரிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகிறது. எனவே பகலில் வெளியில் தலைகாட்டாத மக்களை பிரசார களத்துக்குள் இழுத்துவர இந்த கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கு பாடலுடன் கூடிய ஆடல் தேவைப்படுகிறது. அதுவும் மக்கள் மனதில் இடம்பிடித்த தலைவர்கள் வேடத்தில் வந்து ஆடினாலும், பேசினாலும் கேட்கவே வேண்டாம், கூட்டம் தானாக கூடிவிடும்.
எனவே முந்தைய தேர்தல்களைப் போன்று இந்த தேர்தலிலும் மேடைக்கலைஞர்களும், ஆடல்-பாடல் குழுவினரும் தங்களுக்குரிய பங்களிப்பை அளித்து வருகிறார்கள். கரகோஷத்தை அள்ளும் இந்த கலைஞர்கள் உற்சாகமாக காணப்பட்டாலும், அவர்களது தொழில் உற்சாகமாக நடந்து வருகிறதா? எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறதா? தேர்தலில் கிராமிய கலைஞர்கள் பங்களிப்பு இருக்கிறதா? மேடை நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதி கிடைக்கிறதா? என்றெல்லாம் அந்த துறை கலைஞர்களை சந்தித்து கேட்டோம். அப்போது பல தகவல்களை நம்மிடம் கூறினார்கள்.
தென்மாவட்ட மேடை நடன கலைஞர்கள் சங்கத்தலைவர் ரஞ்சித்குமார் கூறியதாவது-
மதுரையை பூர்வீகமாக கொண்டவன் நான். கலையின் மீது அதிக ஆர்வம் உண்டு. இதனால் பல்வேறு மேடைகளில் சிறிய வயதில் இருந்தே ஏராளமான நடிகர்களின் வேஷம் போட்டு நடித்துள்ளேன். கடந்த 35 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளேன். ரஜினி-கமல் வேஷம் அதிகமாக போட்டுள்ளேன். கடந்த 2004-ம் ஆண்டில் தென்மாவட்ட மேடை நடன கலைஞர்கள் சங்கத்தை தொடங்கி, அதன் தலைவராக தற்போது வரை இருந்து வருகிறேன். இதுமட்டும் அல்லாமல் ‘மிஸ்டர் மிராண்டா’ என்ற நடன நாட்டியக்குழுவையும் நடத்தி வருகிறேன். இந்த குழுவில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
திருமணம், கோவில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் நடன, நாட்டியம் நடத்துவோம். வெளிநாடுகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம். இது தேர்தல் நேரம். அரசியல் கட்சியினர் தாங்கள் சார்ந்த கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய எங்களை அழைக்கிறார்கள். நடிகர்கள், அரசியல் தலைவர்கள் போல வேஷம் போட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு எங்களை அழைக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் தினந்தோறும் எங்கள் குழுவுக்கு மொத்தமாக குறிப்பிட்ட தொகையை வழங்கி, அழைத்து செல்கிறார்கள்.
இப்போது மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நாங்கள் பிரசாரத்துக்காக சென்று வருகிறோம். பிரசாரத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போல வேஷம் போட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்போம். இப்போது அ.தி.மு.க. சார்பில் பிரசாரம் செய்ய 12 பேர் கொண்ட குழு வந்துள்ளோம். தரும் தொகையை நாங்கள் பிரித்து கொள்வோம். அ.தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்ய சென்றால் அவர்கள் விரும்புவது போல முக்கிய தலைவர்கள் வேஷம் போடுவோம். தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்ய சென்றால் அவர்கள் கூறும் நபர்களை போல் மேக்கப் செய்து மக்கள் மத்தியில் தோன்றுவோம்.
ஜெயலலிதாவை போல வேஷம் போடுவதற்கு 2 பெண்கள் தான் உள்ளனர். அவர்கள் ஹேமா, ஜெயந்தி ஆவர். எம்.ஜி.ஆர். வேஷம் போடுவதற்கு சுமார் 10 பேர் உள்ளனர். கருணாநிதி வேஷம் போடுவதற்கு ஒரே ஒருவர் மட்டுமே உள்ளார்.
விஜயகாந்த், அஜித், விஜய் ஆகிய நடிகர்கள் போல வேஷம் போட நிறைய பேர் இருக்கிறார்கள். மேக்கப் போடுவதற்கு தனியாக ஆட்கள் கிடையாது. அவரவர் என்னென்ன வேஷம் போட இருக்கிறார்களோ, அதை அவர்களாகவே போட்டுக்கொள்வார்கள். அதற்கான உடைகள், மேக்கப் பொருட்கள் எல்லாம் அவரவரே வைத்திருப்பார்கள்.
காலங்கள் மாறியபோதும், இந்த தொழிலை ஏற்று நிறைய பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். நடன, நாட்டிய நிகழ்ச்சியை உருவாக்கியதே மதுரை தான். ஆனால் சில ஊர்களில் ஆபாச நடனம் பிரபலமாகியதன் காரணமாக, இந்த தொழில் மீதான மக்களின் பார்வை தவறானதாக மாறிவிட்டது. இதனால் திருவிழாக்களில் இதன் முக்கியத்துவம் குறைந்துள்ளது.
இருந்தாலும் எங்களுக்கு வருடத்தில் 6 மாதம் தொடர்ந்து வேலை கிடைக்கும். மதுரையில் 8 குழு தான் நிரந்தரமாக இந்த தொழிலை செய்து வருகிறது. மற்ற ஊர்களில் ஏதாவது ஒரு பெயரில் அலுவலகம் அமைத்து குழு நடத்துவது என்பது அரிதாகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் சத்யா என்ற சத்தியமூர்த்தி, கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு நடன கலைஞர்களை வைத்து ஆடல்-பாடல் நிகழ்ச்சி, கரகாட்டம் நடத்தி வருகிறார். தற்போது தேர்தல் நேரம் என்பதால், கலைஞர்களை திரட்டி பிரசாரத்துக்கு அழைத்து செல்கிறார். அவர் கூறியது இனி...
மாசி, பங்குனி, சித்திரை என்றாலே விழாக்காலம்தான். கிராமம் தோறும் திருவிழாக்கள் நடக்கும். அந்த சமயத்தில் கரகாட்டம், கிராமிய நிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் நடத்துவார்கள். இதனால் கிராமிய கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது பிரசாரமும் சூடுபிடித்துள்ளது.
அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்ய செல்லும்போது, தங்களது கட்சிக்கு தேவையான நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்களை போன்று வேஷம் போட்டு கலைஞர்களை அழைத்து செல்வார்கள். இதனால் தற்போது அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதே போல் கரகாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம் ஆடுபவர்களும் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். தேர்தல் சமயத்தில் கிராமிய கலைஞர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது என்னவோ உண்மைதான்.
இருந்தாலும், தற்போது நடைபெற்று வரும் திருவிழாக்களில் தேர்தலை காரணம் காட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்த போலீசார் அனுமதி மறுக்கிறார்கள். இதனால் மற்ற கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. கடந்த ஆண்டு மாசி, பங்குனி மாதங்களில் சுமார் 25 முதல் 30 நிகழ்ச்சிகள் வரை நடத்தினோம். இந்த ஆண்டு தேர்தல் அறிவிப்பின் காரணமாக, இதுவரை திருவிழாக்களில் 5 நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்தி உள்ளோம். பல்வேறு கெடுபிடிகளால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் திருவிழாவில் நடன கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலும், இது கானல் நீர் போன்றதுதான். வழக்கமான கோவில்களுக்கு செல்லும் வாய்ப்புகளை இழந்துவிட்டோமோ? என எண்ணத்தோன்றுகிறது.
போதாக்குறைக்கு டி.வி.க்களாலும், செல்போன்களாலும் கரகாட்டம் போன்ற கிராமிய நிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் மீது மக்களின் ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால் இந்த தொழிலை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பலர் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆடல்-பாடல் நடன கலைஞர்கள் கொடி கட்டி பறந்தனர். இப்போது அவர்கள் எந்த மூலையில் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கலைஞருக்கு கலைஞர்களின் புகழாரம்
மதுரை செல்லூரில் மதுரை மன்னர்கள் நடன, நாட்டியக்குழுவை சேர்ந்தவர்கள் கூறுகையில், “தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு கட்சியினரும் தங்களது கட்சிகள் சார்ந்த தலைவர்கள் போல ஆட்களை தயார் செய்து மக்களை கவர்ந்து வருகின்றனர். அவர்களில் கருணாநிதி வேஷம் போடுபவர்கள் மிக மிக குறைவு. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியலில் இரண்டற கலந்து இருந்தவர் கருணாநிதி. ஆனால் இந்த தேர்தலில் அவர் இல்லை. ஆனாலும் அவர் வேஷம் போட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவருக்கு தி.மு.க.வினரும், பொதுமக்களும் மிகுந்த வரவேற்பு அளிக்கிறார்கள். கருணாநிதியை போன்று பாவனை செய்வதும், அவரை போன்று தோன்றி பேசுவதும் எளிதானது அல்ல. தமிழ் உச்சரிப்பு அவரைப் போன்று வரவேண்டும் என்று கரகரத்த குரலில் கடும் பயிற்சி எடுக்க வேண்டும். இல்லை என்றால் அவரது தொண்டர்களிடம் பதில் சொல்ல முடியாது” என்று புகழாரம் சூட்டினர்.
‘அம்மா’வை நினைத்து கதறும் நெஞ்சங்கள்
“இரும்பு பெண்மணி ஜெயலலிதா. உலகம் அறிந்த பிரபலம். அரசியலில் பலருக்கு முன்னோடியாகவும் இருக்கிறார். தமிழக பெண்கள் மத்தியில் அவருக்கென தனி இடம் உண்டு. அவர் போல உடல் அமைப்பை நான் பெற்றுள்ளேன். இது இயற்கை எனக்கு அளித்த மிகப்பெரிய வரம். அவர் போல மேக்கப் செய்து மேடைகளில் தோன்றுவதால், எனக்கும் ரசிகர்கள் உண்டு.
கிராமப்பகுதிகளில் திருவிழாக்களின் போது நடன நிகழ்ச்சியில் ஜெயலலிதா போல தோன்றும்போது, அங்குள்ளவர்கள் உற்சாகத்துடன் வரவேற்பார்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர். அவர் மறைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் மரணத்துக்கு பின்னர் மக்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. கடந்த சில நாட்களாக தேர்தல் பிரசாரத்துக்கு செல்கிறேன். என்னை பார்த்ததும், ஜெயலலிதாவின் தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு கைகளை பற்றி கண்ணீர் விடுவது எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியாக உள்ளது. அ.தி.மு.க.வில் அடிமட்டத்தொண்டர்கள் குறிப்பாக வயது முதிர்ந்த பெண்கள் என்னை பார்த்து, “அம்மா.... உங்களுக்கு மறைவே கிடையாது” என்பார்கள். ஜெயலலிதா மக்கள் மனதில் எவ்வளவு ஆழமாக பதிந்து உள்ளார் என்பதை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஜெயலலிதா வேஷம் போட்டால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அவரைப் போன்று மேடையில் பேச சொல்வார்கள். அப்போது, அவர் பாணியிலேயே நீங்கள் செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா... என்று கேட்பேன். அப்போது கைதட்டல் பலமாக வரும், அதை எப்போது நினைத்தாலும் உடல் சிலிர்த்துவிடும் என்கிறார் மதுரையை சேர்ந்த ஹேமா.
எம்.ஜி.ஆர். வேடத்தில் தோன்றும் போது....
“நான் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன். உருவத்தில் அவரைப்போல நான் இருப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறினார்கள். அதை கேட்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். இது எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். மேடைகளில் எம்.ஜி.ஆர். பாடல் களுக்கு நடனம் ஆடுவதற்கு அழைத்தார்கள். மகிழ்ச்சியுடன் சென்றேன். பின்னர் அதுவே எனது வாழ்க்கையாகவும், தொழிலாகவும் மாறிப்போனது. எம்.ஜி.ஆரை போல அரிதாரம் பூசிக்கொண்டு தெருத்தெருவாக மக்கள் முன் தோன்றினேன்.
பல நேரங்களில் எம்.ஜி.ஆர். என்றே என்னை மக்கள் நினைத்து வரவேற்றனர். கைகுலுக்குவதும், கட்டித்தழுவுவதும் என ஏகோபித்த ஆதரவு பல இடங்களில் கிடைத்தது. தனது தலைவனை நேரில் பார்த்த சந்தோஷத்தில் மாலை அணிவித்து, ரொக்கப்பரிசு வழங்கியவர்களும் ஏராளம்.
இதனால் ஒவ்வொரு தேர்தலின்போதும் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். வேஷம் போட்டு மக்கள் மத்தியில் தோன்றி வருகிறேன். என்னை போல் பலர் எம்.ஜி.ஆர். வேஷம் போடுகிறார்கள். தற்போதைய நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, சேலம் என பல்வேறு மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். வேஷம் போட்டு பிரசாரத்துக்கு சென்று வருகிறேன். நல்ல வரவேற்பு இருக்கிறது. எம்.ஜி.ஆரைப் போலவே நானும் மேடைகளில் தோன்றி மக்கள் மத்தியில் கைகளை அசைத்தவுடன், எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து, தங்களது கரகோஷங்களால் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். எம்.ஜி.ஆர். மரணம் அடைந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் அவரது புகழ் மங்கிப்போகவில்லை என்பதை அவரை போல வேஷம் போட்டுள்ள எனக்கு மக்கள் அளிக்கும் ஆதரவின் மூலம் தெரிய வருகிறது. இதற்காக மேக்கப் பொருட்களை நானே எடுத்து சென்று விடுவேன். மற்ற நபர்களின் உதவியுடன் எம்.ஜி.ஆர். வேஷம் போட்டுக்கொள்வேன். நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் வேறு வேலைக்கு செல்கிறேன்”
மேற்கண்ட தகவல்களை உணர்ச்சி பொங்க தெரிவித்தார், மதுரை கலைஞர் பாபு.
தாரைதப்பட்டை குழுவுக்கும் கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த பேண்ட் வாத்திய கலைஞர் பரமன் என்பவர் கூறியதாவது:- பேண்ட் வாத்தியம், தாரைதப்பட்டை, மாடு ஆட்டம், கிழவன், கிழவி ஆட்டம் நடத்தி வருகிறேன். பல்வேறு இடங்களில் இருந்து திருவிழா, விஷேசங்களுக்கு செல்வது வழக்கம். தற்போது தேர்தல் திருவிழா நடந்து வருவதால் பல்வேறு அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விருப்பமான, வாக்காளர்களை கவரும் வகையில் வாத்தியங்கள் மற்றும் ஆட்டங்களை தேர்வு செய்து அழைத்துச்செல்கின்றனர். குழுவினருடன் 3 மணிநேரம் முதல் 8 மணி நேரம் வரை நிகழ்ச்சிகளுக்கு செல்வோம். அரசியல் கட்சியினர் உடனே பணம் கொடுத்துவிடுகின்றனர். இந்த தொழிலை நம்பி 11 குடும்பங்கள் உள்ளோம். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளதால் அதிக வருமானம் கிடைக்கிறது. தேர்தல் திருவிழா எங்களுக்கும் கொண்டாட்டமாகவே உள்ளது. சந்தோஷமாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.