செப்டம்பர் மாதத்திற்குள் ரெயில்வே துறையில் மேலும் 2 நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிட மத்திய அரசு திட்டம்

செப்டம்பர் மாதத்திற்குள் ரெயில்வே துறையில் மேலும் 2 நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.;

Update:2019-04-18 17:43 IST
பொதுத்துறை பங்குகள்

சென்ற நிதி ஆண்டில் (2018-19) பொதுத்துறை பங்குகள் விற்பனை வாயிலாக ரூ.80 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் பங்குகள் விற்பனை அந்த இலக்கைத் தாண்டி ஏறக்குறைய ரூ.85 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது.

நடப்பு 2019-20-ஆம் ஆண்டில் அரசுப் பங்குகள் விற்பனை இலக்கு ரூ.90 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டிற்கான முதல் இலக்கை விட (ரூ.80,000 கோடி) இது 12.5 சதவீதம் அதிகமாகும்.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ரெயில்வே துறையைச் சேர்ந்த இர்கான் இண்டர்நேஷனல், ரைட்ஸ், ஆர்.வி.என்.எல்., ஐ.ஆர்.எப்.சி. மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. ஆகிய 5 நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிட கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒப்புதல் அளித்தது. இன்றைய நிலையில் ரைட்ஸ், இர்கான் இண்டர்நேஷனல் மற்றும் ரெயில் விகாஸ் நிகாம் (ஆர்.வி.என்.எல்) ஆகிய 3 ரெயில்வே நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் மேலும் 2 ரெயில்வே நிறுவனங்களின் புதிய பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வகையில் இந்தியன் ரெயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.எப்.சி) மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. ஆகிய நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஆர்.எப்.சி.யின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.1,000 கோடி திரட்டப்பட உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில் மத்திய அரசு ரூ.500 கோடி திரட்ட இருக்கிறது.

ஆர்.வி.என்.எல்.

ஆர்.வி.என்.எல். நிறுவனத்தின் புதிய பங்குகள் இமமாதம் 11-ந் தேதி (வியாழக்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதல் நாளில் இந்தப் பங்கின் விலை 0.26 சதவீதம் மட்டும் ஏற்றம் கண்டு ரூ.19.05-ல் நிலைகொண்டது.

மேலும் செய்திகள்