வித்தியாசமான விஞ்ஞானிகள்
பார்வையற்றவர்களுக்கான எழுத்து முறையை உருவாக்கிய பிரெய்லி;
திடீர் பார்வையிழப்பால், பார்வை இழந்தவர்களின் வலியை உணர்ந்த ஒருவர்தான் உலக பார்வையற்றவர்களின் கண்ணைத் திறக்கும் எழுத்து முறையை உருவாக்கினார். ஆனாலும் அவரது கண்டுபிடிப்பு அவர் இறக்கும் வரையில் ஏற்கப்படாமலே இருந்தது. அவர் இறந்து 100 ஆண்டு களுக்குப் பின்பு, அவரது கண்டுபிடிப்பின் சிறப்பு உணரப்பட்டு, அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு அரசு மரியாதையுடன் மறு அடக்கம் செய்யப்பட்டது. அத்தகைய சிறப்புக்குரிய கண்டுபிடிப்பாளர் லூயிஸ் பிரெய்லியின் வரலாற்றை அறிவோமா...
பிரெய்லி சிறுவனாக இருந்தபோது குதிரைக்கு சேணம் தைக்கும் தொழிலாளியான தன் தந்தையுடன் அமர்ந்து குறும்புகள் பல செய்வார். ஒருநாள் இவர் தந்தை வெளியே சென்ற நேரத்தில் குதிரை சேணத்தை வெட்டுவதுபோல் செய்து கத்தியால் தன் இடது கண்ணைக் குத்திக்கொண்டார். டாக்டர்கள் அவரை குணப்படுத்தினாலும் ஒரு கண்ணில் பார்வை பறிபோனது. நாட்கள் செல்லச் செல்ல மற்றொரு கண்ணும் பாதிப்படைந்து இரண்டு கண்களும் பார்வையில்லாமல் போயின.
தனக்குப் பார்வையற்ற பின்னரும் பல சோதனைகளைக் கடந்து பார்வையற்றவர்களுக்கும் கூட எழுத்து முறையை அமைத்துவிட்டார். இத்தகைய சிறப்புமிக்க இவர் பிரான்ஸ் நாட்டில் 1809-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி பிறந்தார். சில காலங்கள் உள்ளூர் பள்ளியில் படித்து அறிவையும், பாராட்டையும் பெற்றார். பின்னர் பாரீசில் இருந்த பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார்.
அப்பள்ளியோ சிறைச் சாலை போன்று இருந்தது. தங்கும் அறைகள் சிறியதாகவும், ஈரக்கசிவுகள் கொண்டதாகவும் இருந்தன. சிறு தவறுக்கும்கூட அங்கு கடுமையான தண்டனையை ஆசிரியர்கள் வழங்கினார்கள். மாணவர்களோ அங்கு தினமும் அழுகையுடன் காணப்பட்டார்கள்.
லூயிஸ் பிரெய்லி அதனைப் பற்றி கவலைப்படாமல் துன்பங்களை இன்பங் களாக்கிப் படித்தார். பல பாடங்களில் பரிசும், பாராட்டும் பெற்றார். காலணி தைக்கும் கலையிலும் தேர்ச்சி பெற்றார்.
அப்போதுதான் அவருக்கு பார்வையற்றோா் களுக்கான தனிப்பட்ட எழுத்துமுறையை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது பலர் பலவிதமான வடிவங்களுடைய எழுத்துகளை உருவாக்கி இருந்தாலும் அவைகள் எல்லாம் எளிமையாக பயன்தரும் விதத்தில் அமையவில்லை.
சார்லஸ் பார்பியா என்ற ஒரு படைத்தலைவர் வீரர்கள் தன் கட்டளையை இரவு நேரம் விளக்கொளி இல்லாமல் படிப்பதற்காக ஓர் எழுத்து முறையை உருவாக்கி இருந்தார். இதனைப் பிரெய்லி அறிந்தார். அவரிடமே நேரில் சென்று விளக்கம் கேட்டார். இதைப் பற்றியே பல இரவுகள் தூக்கமின்றி சிந்தனை செய்தார்.
பல ஆண்டுகளாக நடத்திய ஆய்வுக்குப் பின்னர் ஆறே புள்ளிகளைக் கொண்டு அறுபத்து மூன்று வடிவங்களை அமைத்தார். அதிலேயே எல்லா எழுத்துகளும் குறியீடுகளும் அடங்கிவிட்டன.
தான் படித்த பள்ளியிலேயே கீழ்நிலை ஆசிரியராக அமர்த்தப்பட்டார். தன்னுடைய எழுத்து முறையில் மாணவர்களுக்கு எளிதில் கல்வி கற்பித்தார். படிப்பதற்கு புத்தகமின்றி துன்பமடைந்த மாணவர்கள் எல்லாம் சுலபமாகவும், ஆர்வமாகவும் கற்கத் தொடங்கினர்.
பிரெய்லி இசைத்துறையிலும் மிகுந்த புலமைப் பெற்றிருந்தார். வாத்தியக்கருவிகள் சம்பந்தப்பட்ட சில குறியீடுகளை அமைத்தார். பாரீஸ் நகரில் இருந்த மூன்று மாதா கோவில்களில் இவர் இசைக்கருவிகளில் இருந்து எழுப்பிய இன்னிசையானது அந்த நகரம் முழுக்க ஒலிக்கத் தொடங்கியது.
ஆர்மிடேஜ் என்ற இங்கிலாந்துக்காரர் ஒருவர் தன் கண்களை திடீரென இழந்துவிட்டார். அவர் ஒரு மருத்துவர். பல்வேறு எழுத்து முறைகளை இரண்டு ஆண்டுகளாக படித்தார். ஆராய்ந்தார். இறுதியில் அவர் பிரெய்லியின் எழுத்துமுறையே மிகச்சிறந்தது என கண்டறிந்தார். உலகமே அதனை ஒத்துக்கொள்ளுமாறு செய்துவிட்டார்.
ஆனால் பிரெய்லி உயிரோடு இருந்தவரையிலும் அவரது எழுத்து முறைக்கு பிரெஞ்சு அரசாங்கம் ஒப்புதல் தரவில்லை. 1852-ல் பிரெய்லி இயற்கை எய்தினார். அந்நேரம் அவரைப் போற்றத்தவறிய பிரெஞ்சு அரசானது சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1952-ல் சிற்றூரிலிருந்த அவரது கல்லறையைத் தோண்டி எடுத்துவந்து பாரீஸ் நகரில் புகழ்பெற்றவர்களை மட்டுமே அடக்கம் செய்யும் இடமாகிய பாந்தியன் என்ற இடத்தில் அடக்கம் செய்து, தேசிய அளவிலான மரியாதையை வழங்கியது.
உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர் களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றிகளும், மரியாதைகளும் என்றாவது ஒருநாள் கிடைத்துவிடும். இன்றைய உலகில் பல்வேறு சாதனைகளைச் செய்ய தயாராக இருக்கும் இளைய தலைமுறையினர் எல்லாம் பிரெய்லியின் வாழ்க்கையைப் பாடமாக ஏற்றுக்கொண்டு வெற்றிகளைத் தொடங்க வேண்டும்.
- கே.நல்லசிவம்