நெகிழவைத்த நிஜங்கள் : அன்பான பேச்சும்.. பண ஆசையும்..
நான் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் எதிர்புற இருக்கையில் மூதாட்டி ஒருவர் அமர்ந்திருந்தார்.;
பேருந்தில் தன் அருகில் அமர்ந்திருந்த இரு மாணவிகளிடம் பேசிக்கொண்டே வந்தார் மூதாட்டி ஒருவர். ஒருகட்டத்தில் அந்த மாணவிகளை புகழ்ந்து கொண்டிருந்தார். ‘‘நீங்கள் நன்றாக இருப்பீர்கள். நீங்கள் பஸ் ஏறுவதற்கு முன்பு இந்த இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். நான் கெஞ்சி கேட்டும் எனக்கு உட்கார இடம்தர மறுத்துவிட்டார். ஆனால் நீங்கள் அப்படி இல்லை. அடித்துபிடித்து உட்காராமல் எனக்கு இடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்தீர்கள்’’ என்றார்.
அடுத்த நிறுத்தத்தில் அந்த மாணவிகள் இறங்கி விட்டார்கள். இன்னொரு மாணவி ஏறினார். அவளிடம் அந்த மூதாட்டி பேச்சு கொடுத்தார். அப்போது, ‘‘நீ பார்ப்பதற்கு நல்லவளாக இருக்கிறாய். நான் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டிற்கு செல்ல ஆட்டோ பிடிக்க வேண்டும். என்னிடம் பணம் இல்லை. உன்னிடம் இருந்தால் கொடு’’ என்றார். அந்த மாணவியும் மூதாட்டி மீது பரிதாபப்பட்டு பணம் கொடுத்து உதவினார்.
உடனே அந்த மாணவியிடம், ‘‘இந்த சீட்டில் இதற்கு முன்பு இரண்டு மாணவிகள் இருந்தார்கள். நான் பணம் கேட்டும் அவர்கள் எனக்கு உதவவில்லை. நீ நான் கேட்டதும் உடனே பணம் கொடுத்து உதவி செய்துவிட்டாய். நீ நன்றாக இருக்க வேண்டும்’’ என்று வாழ்த்தினார். அப்போது தான் உண்மை நிலவரம் எனக்கு புரிந்தது. அந்த மூதாட்டி, தன் அருகில் வந்து அமர்கிறவர்களை புகழ்ந்து, எப்படியாவது அவர்களிடமிருந்து பணம் பெற்றுவிடுகிறார் என்பது புரிந்தது.
-எ.அஸ்மிகா தாசராஜன், கன்னியாகுமரி.