எட்டாவது நாளாக சுணங்கிய பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் 96 புள்ளிகள் சரிவு நிப்டி 23 புள்ளிகள் இறங்கியது;

Update:2019-05-11 10:31 IST
மும்பை

வெள்ளிக்கிழமை அன்று தொடர்ந்து எட்டாவது நாளாக பங்கு வர்த்தகம் சுணங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 96 புள்ளிகள் சரிந்ததது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 23 புள்ளிகள் இறங்கியது.

தொடர் சரிவு

உலக நிலவரங்கள் காரணமாக இந்திய பங்கு வர்த்தகம் தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போட்டி, அன்னிய முதலீடு வெளியேற்றம் மற்றும் லாப நோக்கில் பங்குகள் விற்பனை போன்றவற்றால் நேற்றும் பங்குச்சந்தைகள் சுருண்டன.

அந்த நிலையில், மும்பை சந்தையில் பல்வேறு துறை குறியீட்டு எண்களும் இறங்கின. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது. இந்தப் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எச்.டீ.எப்.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி உள்பட 9 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் டாட்டா ஸ்டீல், யெஸ் வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, ஓ.என்.ஜி.சி., பஜாஜ் பைனான்ஸ், டி.சி.எஸ்., பவர் கிரிட் உள்ளிட்ட 21 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 95.92 புள்ளிகள் சரிவடைந்து 37,462.99 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 37,721.98 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 37,370.39 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1186 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1307 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 159 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,372 கோடியாக உயர்ந்தது. கடந்த வியாழக்கிழமை அன்று அது ரூ.1,991 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 22.90 புள்ளிகள் இறங்கி 11,278.90 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,345.80 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,251.05 புள்ளிகளுக்கும் சென்றது.

மேலும் செய்திகள்