பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்களில் ரூ.8,238 கோடி முதலீடு
இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்தது பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்களில் ரூ.8,238 கோடி முதலீடு;
புதுடெல்லி
ஏப்ரல் மாதத்தில் பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டு திட்டங்களில் (எஸ்.ஐ.பி) முதலீடு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.8,238 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
சொத்து மதிப்பு
பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.23.79 லட்சம் கோடியாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இது ரூ.24.78 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. ஆக, இத்துறையின் சொத்து மதிப்பு 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு 61 சதவீதம் குறைந்து ரூ.4,609 கோடியாக உள்ளது. பங்குச்சந்தைகளின் ஏற்ற இறக்கம் காரணமாக இந்தத் திட்டங்களில் முதலீடு சரிவடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் ரூ.11,756 கோடி முதலீட்டை ஈர்த்து இருந்தன.
இந்நிலையில், பரஸ்பர நிதி துறையின் சீரான முதலீட்டுத் திட்டங்கள் ரூ.8,238 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளன. இது ஒரு புதிய சாதனை அளவு என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாக இப்பிரிவில் முதலீட்டாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதே இதற்குக் காரணமாகும்.
புதிய முதலீட்டாளர்கள்
பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சி மற்றும் அனுபவம் வாய்ந்த வல்லுனர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது நல்லது என்று கூறப்படுகிறது.