இளம் மிருதங்க இசை மேதை

மிருதங்கம் வாசித்து அசத்தும் 14 வயது கேரள சிறுவன் தேவிபிரசாத்துக்கு 2022-ம் ஆண்டுக்கான பிரதமரின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2022-01-30 17:50 IST
இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 20 குழந்தைகளுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாடினார். அப்போது பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு விருதுக்கான சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கேரளாவைச் சேர்ந்த மிருதங்கம் வாசிக்கும் 14 வயது தேவிபிரசாத்தும் மல்லாபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கலந்துகொண்டார். கலை மற்றும் பண்பாடு பிரிவில் விருதுக்கு தேவிபிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.

“இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதையும் பிரதமருடன் உரையாட வாய்ப்பு கிடைத்ததையும் எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். என் தந்தை குழந்தைகளுக்கு மிருதங்கம் கற்றுக் கொடுப்பார். சிறு வயதிலிருந்தே அவர் கற்றுக் கொடுப்பதை நான் உன்னிப்பாகக் கவனித்திருக்கிறேன். சொர்க்கத்தில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும் ரிதம் இந்த வாத்தியத்திலிருந்து வரும். குழந்தைப் பருவத்திலே இதனை அனுபவித்திருக்கிறேன். மேலும், திறமையை வளர்த்து மிருதங்க வித்வானாக வரவேண்டும் என்பதே என் ஆசை” என்றார், தேவிபிரசாத்,

தற்போது மாஸ்ட்ரோ திருவனந்தபுரம் சுரேந்திரனிடம் தேவிபிரசாத் மிருதங்கம் பயின்று வருகிறார். பெரிய கலைஞர்களுடன் மேடையில் மிருதங்கம் வாசித்ததும், பல போட்டிகளில் வெற்றி பெற்றதுமே அவருக்கு தேசிய விருதை கொண்டு வந்து சேர்த்துள்ளது.

கர்நாடக இசைக் கலைஞர்கள் பெரும்பாவூர் ரவீந்திரநாத் மற்றும் ராகரத்தினம் மண்ணூர் ராஜகுமரன் உன்னி ஆகியோர் கச்சேரிகளில் தேவிபிரசாத் மிருதங்கம் வாசித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு அலுவா சங்கீத சபா நடத்திய மாநில அளவிலான மிருதங்கப் போட்டியில் முதல் பரிசை வென்றார். தற்போது 9-ம் வகுப்பு படிக்கும் தேவிபிரசாத், தமது 7 வயதிலேயே அரங்கேற்றம் நடத்தி விட்டார்.

மேலும் செய்திகள்