சிறப்புக் கட்டுரைகள்
குடும்ப தலைவி உருவாக்கிய சமூக வலைத்தளம்

குடும்ப பெண்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களை கவனிப்பது, சமையல் பணிகளை செய்வது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, திரும்ப அழைத்து வருவது... என அவர்களின் வேலை அட்டவணை நீண்டு கொண்டே இருக்கும். இருப்பினும் கிடைக்கும் சிறு இடைவெளிகளில் எல்லாம், தங்களது தனி திறமைகளை வெளிகாட்ட முயல்கின்றனர்.
சிலர் தையல் கலையிலும், சிலர் மாடித்தோட்ட கலையிலும், சிலர் சிறுதொழிலிலும் கவனம் செலுத்தி, குடும்ப உறுப்பினர்களை பிரமிக்க வைப்பதுண்டு. அந்த பட்டியலில் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த கிருத்திகாவும் ஒருவர். இவர் ஒரு பொறுப்பான குடும்ப தலைவி. இதற்கு முன், ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். இருப்பினும் திருமணத்திற்கு பின், பொறுப்புகள் அதிகரிக்கவே, குடும்ப தலைவி என்ற பொறுப்போடு நிறுத்தி கொண்டார். இன்று இவருக்கு மற்றொரு பொறுப்பும் சேர்ந்திருக்கிறது. ‘பேப்பர் பேஜ்’ சமூக வலைத்தளத்தின் நிறுவனர் என்பதுதான் அது.

ஆம்...! குடும்ப தலைவியான கிருத்திகா, வீட்டில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தனி சமூக வலைத்தளத்தையே உருவாக்கி இருக்கிறார்.

‘‘நான் எம்.காம், எம்.பில் முடித்திருக்கிறேன். என் கணவர் ராம்பிரகாஷ் வழக்கறிஞர். அவர் புத்தகங்களை பி.டி.எப்.முறையில் பதிவிறக்கம் செய்து படிக்கும் இணையதளம் ஒன்றை நிர்வகித்து வந்தார். அதை வெகு சிலரே பயன்படுத்தினர். நாம் ஏன், அதை எல்லா மக்களும் பயன்படுத்தும் தளமாக மாற்றக்கூடாது என்ற கேள்வியில்தான், பேப்பர் பேஜ் சமூகவலைத்தளம் உருவானது’’ என்கிறார், கிருத்திகா.

இவர் ஆரம்பத்தில் குடும்ப தலைவிகள் மட்டுமே பயன்படுத்தும் சமூகவலைத்தளத்தை உருவாக்க திட்டமிட்டார். அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. குடும்ப தலைவிகள், அவர்களது கணவர், உறவினர்களுக்கு இந்த சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தவே, எல்லா தரப்பினரும் பயன்படுத்தும் வலைத்தளமாக மாறியிருக்கிறது.

‘‘கணவரின் இணையதளத்தை எப்படியெல்லாம் மாற்றியமைக்கலாம் என்று சிந்தித்தபோது, பல யோசனைகள் தோன்றின. பேஸ்புக், டிவிட்டர், யூ-டியூப், பழைய பொருட்களை விற்பனை செய்வது, புதிய நிறுவனங்களின் அறிமுகம் என எல்லா சேவைகளையும், ஒரே சேவையாக வழங்கினால் என்ன என்ற கேள்வி எழுந்தது. நான் வணிகம் சம்பந்தப்பட்ட படிப்புகளை முடித்திருந்ததால், சமூக வலைத்தள உருவாக்கத்திற்கு பல டெவலப்பர்களின் ஆலோசனைகளை கேட்டோம். சிலர் இவை அனைத்தையும் ஒன்றிணைப்பது சாத்தியமில்லாத ஒன்று என்றனர். ஒருசிலரே சாத்தியம் என பச்சை கொடி காண்பித்தனர். அவர்களது துணையோடு, சில கோடிங் ஸ்கிரிப்ட் எழுதினோம். சிலவற்றை பணம் செலுத்தி காப்புரிமையோடு வாங்கினோம். அப்படி இப்படி என... 3 வருடங்கள் உருவாக்க பணியிலேயே உருண்டோடின. இறுதியாக, கடந்த வருட இறுதியில் ‘பேப்பர் பேஜ்’ சமூக வலைத்தளம் தயாரானது’’ என்றவர், இதை இன்னும் மேம்படுத்தும் திட்டத்தில் இருக்கிறார்.

சோதனை முறையில் அறிமுகமாகி, பலரது நன்மதிப்பை பெற்றிருக்கும் பேப்பர் பேஜ் வலைத்தளத்தை, 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் தொடங்கி, காஷ்மீர், மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளில் வசிப்போர், பயன்படுத்துகின்றனர்.

‘‘பேப்பர் பேஜ்.இன் (paperpage.in) இன்னும் முழுமைப்பெறவில்லை. ‘லைக்’ பட்டன், ஷேர் பட்டன், மெசஞ்சர் வசதி, வீடியோ கால் வசதி, இருப்பிடத்தை பகிரும் வசதி, வேலை வாய்ப்பு தகவல்கள், நியூஸ் பீட், பெரிய கோப்புகளை பரிமாறிக் கொள்ளும் வசதி, ஆடியோ பதிவை பரிமாறுவது... என பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இன்னும் பல வசதிகளை சேர்ப்பது குறித்து, திட்டமிட்டு வருகிறேன். இதற்கென தனி சர்வர் அமைத்து, அதிகளவில் கிளவுட் ஸ்டோரேஜ் அமைத்து கொடுத்திருப்பதால், எவ்வளவு பெரிய கோப்புகளையும் பரிமாறவும், சேமித்து வைக்கவும் முடியும்’’ என்றவர், இதில் தகவல் திருட்டு என்ற விஷயத்திற்கே வாய்ப்பில்லை எனவும் குறிப்பிடுகிறார். மேலும் பேசியவர், ‘‘விளையாட்டாகவே சமூக வலைத்தள முயற்சியில் இறங்கினேன். ரூ.20 ஆயிரம், ரூ.50 ஆயிரம்... என சிறுக சிறுக செலவழித்து, இன்று ரூ.20 லட்சம் வரை செலவழித்து, இந்த பேப்பர் பேஜ் தளத்தை கட்டமைத்திருக்கிறேன். வலைத்தள கட்டமைப்பு பற்றி அவ்வளவாக தெரியாது என்றாலும், அதை முழு மூச்சோடு பயின்று வருகிறேன். வெகு விரைவிலேயே, சொந்தமாக ஸ்கிரிப்ட் எழுதி, வலைத்தளத்தை மேம்படுத்தும் ஆசைகளும் இருக்கிறது’’ என்று முடித்தார்.

பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங் களுக்கு நிகராக, ஒரு தமிழ் குடும்ப பெண் வலைத் தளம் தொடங்கி இருப்பது பாராட்டுக்குரியதே. அது சோதனை அடிப்படையில் அறிமுகமாகி இருக்கும் நிலையிலேயே, 40 ஆயிரம் பயனாளிகளை பெற்றிருப்பது, ஆச்சரியப்பட வைக்கிறது.