மாணவி மீதான வழக்கை வாபஸ் பெற மாட்டேன் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தூத்துக்குடி விமான நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி மீதான வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2018-09-04 23:15 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடிக்கு விமானத்தில் நான் சென்றேன். 3-வது இருக்கையில் அமர்ந்து இருந்தேன். விமானம் தரையிறங்கிய போது 8-வது இருக்கையில் இருந்த மாணவி சோபியா என்னை நோக்கி வந்து கைகளை உயர்த்தி பாரதீய ஜனதா கட்சியின் பாசிச ஆட்சி ஒழிக என்று சத்தம் போட்டார். நாகரிகம் கருதி விமானத்தில் நான் எதுவும் பேசவில்லை.

விமான நிலைய வரவேற்பு அறைக்கு வந்தபோது விமானத்தில் கோஷம் போடுவது சரியா? என்று கேட்டேன். எனக்கு பேச்சுரிமை உள்ளது, அப்படி தான் பேசுவேன் என்று அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மறுபடியும், மறுபடியும் கூறியதால் அவரை பின்னால் இருந்து ஏதாவது ஒரு இயக்கம் இயக்கி இருக்கலாம் சந்தேகம் ஏற்பட்டது. அவர் நடந்துகொண்ட முறை பற்றி புகார் செய்தேன். சோபியா முகநூலில் பார்த்தால் எப்படிப்பட்ட பின்புலத்தில் இருந்து வந்துள்ளார் என தெரிந்துவிடும். பாரதீய ஜனதாவை எதிர்த்து கோஷம் போட்டால் எல்லாரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நினைக்கிறார்கள்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். என்னுடைய இடத்தில் வேறு யாராக இருந்தாலும் மோசமாக நடந்து இருப்பார்கள். எனக்கு சமூக அக்கறை உள்ளது. இதனால் விமானத்தில் எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை. நான் செய்தது சரியானது.

போலீசார் அவருடைய பின்புலத்தை விசாரிக்கட்டும். தவறு இல்லை என்றால் விடுவிக்கட்டும். தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.

இந்த பிரச்சினை தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் கருத்தை கடுமையாக கண்டிக்கிறேன். அரசியல் கட்சியையும், தலைவரையும் எதிர்த்து கோஷம் போட்டால் உங்களுக்கு மகிழ்ச்சியா?. மெட்ரோ ரெயிலில் அடித்தவர் நீங்கள். அப்போது கருத்து சுதந்திரம் எங்கே சென்றது.

கட்சிக்கும், எனக்கும் எதிராக கோஷம் போட்டு இருக்கிறார்கள். சோபியா தரப்பில் எனக்கு எதிராக உடனே புகார் செய்திருக்க வேண்டும். மாலையில் தான் தந்திருக்கிறார்கள். நான் விமான நிலைய அதிகாரிகளிடம் தான் புகார் செய்தேன். அவர்கள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.

எனக்கு விமானத்தில் அமைதியாக பயணம் செய்ய உரிமை இருக்கிறதா? இல்லையா?. மாணவி மீதான வழக்கை வாபஸ் பெற மாட்டேன். பேச்சுரிமை என்றால் வீட்டிற்கு வந்து சண்டை போடுவார்களா?. மேடை போட்டு பேசலாம். பேச்சுரிமைக்கு ஒரு தளம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவரை எதிர்த்து கோஷம் போட்டால் சும்மா இருப்பார்களா?. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்