மாநில செய்திகள்
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஜூலை மாதத்திலேயே தேர்வு

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த ஆண்டு (2019) முதல் ஜூலை மாதத்திலேயே தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை,

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் நல்லாசிரியர் விருது வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் 373 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதை பெற இருக்கிறார்கள். நம்முடைய அரசை பொறுத்தவரையில் பள்ளிகளை தூய்மையாக வைத்துக்கொள்வதற்காக அதற்கென்று விருது வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு புதுமை பள்ளி விருது என பெயரிடப்பட்டு இருக்கிறது.

தமிழ் வழிக்கல்வியில் படித்த 960 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை நாளை (இன்று) நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது. இதற்கு முன்பு வரை ஆங்கில வழிக்கல்வி படித்தவர்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்டு வந்தது. அதை மாற்றி முழுமையாக தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்காக மட்டும் வழங்கப்படுகிறது. மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும், உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

மேலும் மத்திய அரசு வழங்கும் சிறப்பாசிரியர்கள் விருது தமிழகத்துக்கு குறைக்கப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். அதுமட்டுமில்லாமல் நம்முடைய முதல்-அமைச்சரும் இதுதொடர்பாக வலியுறுத்துவார்.

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெற்று வருவதை போல(செப்டம்பர், அக்டோபரில்) தேர்வு நடத்தப்படாமல், ஜூலை மாதத்திலேயே அடுத்த ஆண்டு (2019) முதல் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கான ஆணையும் பிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறையில் தேர்வு எழுதும்போது அனைவரும் ஒரேநேரத்தில் கல்லூரிக்கு செல்ல அதிகளவில் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.