மாநில செய்திகள்
குட்கா விவகாரம்: முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சந்திப்பு

குட்கா விவகாரம் தொடர்பாக இன்று தமிழகத்தில் பல இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்ற நிலையில் முதல்வர் பழனிசாமியை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேரில் சந்தித்தார். #EdappadiPalanisamy
சென்னை,

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

கடந்த 2016ஆம் ஆண்டில் மாதவரத்தில் உள்ள ஒரு குட்கா குடோனில் வருமான வரித்துறை நடத்திய சோதனை, குட்கா ஊழல் விவகாரம் வெளிவரக்காரணமாக அமைந்தது. இது குறித்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால், கடந்த மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. 3 மாதங்களாக குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த சிபிஐ, முதற்கட்டமாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் இடமிருந்து விசாரணையை துவங்கியது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி மாதவராவுக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான குட்கா நிறுவன உரிமையாளரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மாதவராவிடம் பெற்ற வாக்குமூலத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டது. இந்நிலையில் குட்கா விவகாரம் தொடர்பாக இன்று 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் விடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் குட்கா முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களின் பினாமிகள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் குட்கா விவகாரம் தொடர்பாக இன்று தமிழகத்தில் பல இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்ற நிலையில், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,  டிஜிபி ராஜேந்திரன் நேரில் சந்தித்தார். பின்னர் சில மணி நேர சந்திப்புக்கு பிறகு அங்கிருந்து டிஜிபி ராஜேந்திரன் புறப்பட்டு சென்றார். குட்கா விவகாரத்துக்குப்பிறகு டி.கே.ராஜேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில், முதல்வருடனான இந்த சந்திப்பு முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.