மாநில செய்திகள்
தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் 15-வது நிதிக்குழுவினர் ஆலோசனை

15-வது நிதிக்குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தொழிற்சாலை பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
சென்னை,

ஒவ்வொரு மாநிலத்திற்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதியின் அளவு, மானியங்கள் உள்ளிட்ட விவகாரங்களை மத்திய நிதிக்குழு பரிந்துரைக்கிறது.

இதற்காக குறிப்பிட்ட மாநிலங்களில் நிலவும் பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு சூழல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நிதிக்குழுவினர் அந்தந்த மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம். அப்போது அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள், தொழிற்சாலை பிரதிநிதிகள் போன்றவர்களை நிதிக்குழுவினர் சந்தித்து ஆலோசனைகளை கேட்பார்கள்.

அந்த வகையில், மத்திய அரசு 15-வது நிதிக்குழுவை சமீபத்தில் நியமித்தது. அதன் தலைவராக என்.கே.சிங் உள்ளார். அனூப் சிங், அசோக் லகரி, ரமேஷ் சந்த் ஆகியோர் உறுப்பினர்களாகவும், அரவிந்த் மேத்தா செயலாளராக உள்ளனர்.

இந்த குழுவினர் தமிழகத்தில் 5-ந் தேதி (நேற்று) முதல் 8-ந் தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். முதலாவதாக, தலைமைச் செயலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளை நிதிக்குழுவினர் நேற்று சந்தித்துப் பேசினர். காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கியது.

அ.தி.மு.க. சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் நிதி அமைச்சர் பொன்னையன், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., குணசேகரன், தே.மு.தி.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன்ராஜ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஜி.பி.சாரதி ஆகியோர் கலந்து கொண்டு கருத்து கூறினர்.

சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் அளித்த பேட்டி வருமாறு:-

டி.கே.எஸ்.இளங்கோவன்:- வளரும் மாநிலங்கள், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட மாநிலங்கள் ஆகியவை மத்திய அரசின் நிதிப்பங்கீட்டில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இது மாநில வளர்ச்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும். செயல்படும் மாநிலங்களுக்கு உரிய நிதி, மத்திய அரசுக்கு அதிக வருவாய் தேடித்தரும் மாநிலங்களுக்கு அந்த வருவாய்க்கு ஏற்ற பங்களிப்பு ஆகியவை பற்றி பேசினோம்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்:-தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய வரிப்பங்கு குறைந்து கொண்டே வருகிறது. 1994-ம் ஆண்டு 10-வது நிதிக்குழு அமல்படுத்தப்பட்டபோது மொத்த வரி வருவாயில் 6.4 சதவீதம் வரிப்பங்கு இருந்தது. ஆனால் 14-வது நிதிக்குழு அந்த வரிப்பங்கை 4.03 சதவீதமாக குறைத்துவிட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எடுக்கும் முடிவில் அவ்வாறு தேர்வு செய்யப்படாதவர்கள் தலையிடக்கூடாது. இலவச திட்டத்தை செயல்படுத்த மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் முடிவெடுத்தால் அதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது. நன்றாக செயல்படும் மாநிலங்களுக்கு அதிக நிதி தரப்படவேண்டும் என்பது உள்ளிட்ட சில குறைகளை சுட்டிக்காட்டினோம்.

டி.கே.ரங்கராஜன்:- தமிழகத்துக்கோ மற்ற மாநிலங்களுக்கோ தேவையான நிதியை மத்திய அரசு அளிக்கவில்லை. அவர்களே முழுமையாக எடுத்துகொள்கிறார்கள். இதை எடுத்துக்கூறினோம்.

ஜி.பி.சாரதி:- தமிழகத்துக்கு மானிய தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என்று 8 வழிச்சாலையை தமிழகத்தில் திணிக்க என்ன காரணம் என்றும், அதை கைவிட்டுவிட்டு தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.

மோகன்ராஜ்:- நிதிப்பகிர்வு 2011-ம் மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று 15-வது நிதிக்குழுவில் கூறப்பட்டுள்ளது. அதை கடுமையாக எதிர்த்தோம். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில்தான் கணக்கிடப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டங்களில் தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் ஆகியோரை 15-வது நிதிக்குழுவினர் சந்தித்து பேசினர்.

பின்னர் அவர்கள், நேற்று மாலையில் சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பொருளாதார நிபுணர்களை சந்தித்துப் பேசினர்.

இந்தக் கூட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசுத்துறை செயலாளர்கள் ஆகியோரை சந்தித்து 15-வது நிதிக்குழுவினர் உரையாடுகின்றனர்.