ஆசிரியர் தின விழாவில் 373 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

ஆசிரியர் தின விழாவில் 373 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Update: 2018-09-06 00:20 GMT
சென்னை,

ஆசிரியர் தினவிழா, காமராஜர் விருது வழங்கும் விழா, தூய்மை பள்ளி விருது வழங்கும் விழா என்று முப்பெரும்விழா பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவில் திருச்சி சேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சகோதரர் இருதயம் உள்பட 373 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, மாணவர்களுக்கு காமராஜர் விருது, சுத்தம் மற்றும் சுகாதாரமாக உள்ள பள்ளிகளுக்கு விருதுகளை வழங்கியும், காந்தியின் அனுபவக்கல்வி மற்றும் அடிப்படைக்கல்வி என்ற புத்தகத்தை வெளியிட்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஆசிரியர்களுக்கு இந்த இனிய நன்னாளில் நான் கூற விரும்புவது, ஆசிரியர் என்பவர் கற்பித்தலில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. அவதானியாக, ஆலோசகராக, இனம் காண்பவராக, உதவுபவராக, ஒழுங்கமைப்பாளராக, மதிப்பீட்டாளராக, இன்னும் பல பரிமாணங்களில் தேடலுக்கு வழி செய்பவராக விளங்க வேண்டும் என கல்வியாளர் அறிஞர் லூயில் கோகலே என்பவர் கூறியுள்ளார்.

ஏட்டுக் கல்வியின் வரையறையைத் தாண்டி, பரந்த பரிமாணத்தில், சமூக பொறுப்புடன் தீர்மானிக்கும் திறனோடு, வசீகரிக்கும் தன்மையோடு, சினேகித மனோபாவத்தோடு, பொது நலன் பாராட்டும் நல்லெண்ணத்தோடு, சமூக மேம்பாட்டுக்கு வழிகாட்டும் விதமாக ஆசிரியர் சமுதாயம் செயல்பட வேண்டும். அதேபோல், மாணவ சமுதாயமும் தமக்கே உரித்தான பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆசிரியர் பணி என்பது ஒரு உன்னதமான பணி, புனிதமான பணி. தியாக உணர்வும், சகிப்புத்தன்மையும், விடா முயற்சியும் கொண்டவர்கள் தான் சிறந்த ஆசிரியர்களாக முடியும். எத்தனை எத்தனை துன்பங்கள் மனதுக்குள் இருப்பினும், அவற்றையெல்லாம் தன்னுள் மறைத்து, சோகங்களை தன்னுள் அடக்கி, சுகம் கொடுக்கும் சிவரஞ்சனி ராகமாக, மாணவர்களிடம் வலம் வரும் ஆசிரியர்களாகிய நீங்கள், பாடப் புத்தகத்தையும் தாண்டி சிந்திக்கக் கூடிய மனப்போக்கை மாணவர்களிடம் வளருங்கள்.

தமிழக அரசு மாணவர்களுக்கு நலம் பயக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை உருவாக்கி அதை நன்முறையில் செயல்படுத்தியும் வருகிறது. சுற்றுச்சூழலை பராமரிக்க பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை ஒழித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த இனிய விழாவில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

கல்விச் செல்வமே அழியாச் செல்வம். ஏனைய உலகச் செல்வங்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் போது குறைந்து போகும். ஆனால் கல்விச் செல்வம் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போன்றது. மற்றவர்களுக்கு அளிக்கும்போது ஒரு ஆத்ம திருப்தியைத் தருவது கல்விச் செல்வம் மட்டுமே ஆகும். ஒரு பிறப்பில் ஒருவர் கற்ற கல்வியானது, அவரது ஏழு பிறப்புக்கும் பாதுகாப்பாக அமையும் என்ற வள்ளுவர் வாய்மொழியை மனதில் கொண்டு, கல்வி கற்பதில் மாணவர்கள் மிகவும் உறுதியாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், ‘ஆசிரியர்களுக்கு ஓய்வு முகாம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது’ என்றார்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி, நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் க. அறிவொளி, கண்ணப்பன், லதா , இணை இயக்குனர்கள் நரேஷ், குப்புசாமி, நாகராஜ முருகன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தொடக்கத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்று பேசினார். தொடக்க கல்வி இயக்குனர் எஸ்.கருப்பசாமி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்