மாநில செய்திகள்
தமிழகத்தை தள்ளாட வைக்கும் ‘குட்கா’ ஊழல்

* போதைப்பாக்கு, குட்கா விற்பனைக்கு தமிழக அரசு 2013-ம் ஆண்டு மே 8-ந்தேதி தடை விதித்தது.
* சென்னை அருகே செங்குன்றம் சோத்துப்பாக்கம் தீர்க்கன்கரையாம்பட்டு கிராமத்தில் இயங்கி வந்த குட்கா கிடங்கில் வருமான வரித்துறை 2016-ம் ஆண்டு ஜூலை 8-ந்தேதி நடத்திய சோதனையில் ரூ.250 கோடி வரிமோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

* இதுகுறித்து முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.ஐ. விசாரிக்க கடந்த ஏப்ரல் 26-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மே 30-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.

* இந்த வழக்கின் முக்கிய புள்ளி மாதவராவ் கடந்த 30-ந்தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 9 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 31-ந்தேதி அவரது குட்கா கிடங்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

* குட்கா கிடங்கின் பங்குதாரர்களில் ஒருவரான மாதவராவ் எழுதிய டைரியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமிஷனரும், தற்போதைய டி.ஜி.பி.யுமான டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் மற்றும் காவல்துறை அதிகாரிகள், கலால் வரித் துறை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என 23 பேருக்கு லஞ்சம் கொடுத்த தகவல் இருந்ததாக கூறப்பட்டது.

* லஞ்சம் கொடுத்தது பற்றி மாதவராவ் கூறிய பதில்களை வீடியோவிலும், எழுத்து மூலமாகவும் அதிகாரிகள் பதிவு செய்தனர்.

* இதனை தொடர்ந்தே அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளில் நேற்று சோதனை நடந்தது.