குட்கா ஊழல் வழக்கில் நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

Update: 2018-09-06 00:24 GMT
சென்னை,

தமிழகத்தில் தடையை மீறி குட்கா தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதால், சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த ஒரு குட்கா தயாரிப்பு ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மாதவராவின் ரகசிய டைரி அதிகாரிகள் கையில் சிக்கியது.

அந்த டைரியில், தமிழகத்தில் தடையை மீறி குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு யார்-யாருக்கு எவ்வளவு லஞ்ச பணம் கொடுக்கப்பட்டது? என்ற விவரம் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், கலால் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பெயர்களும் லஞ்ச பட்டியலில் இடம் பெற்று இருந்தது.

குட்கா விற்பனைக்காக அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மாதா மாதம் லஞ்சம் கொடுக்கப்பட்டதும், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மொத்தம் ரூ.40 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.



குட்கா ஊழல் குறித்து விசாரணை நடத்தும்படி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி கடிதம் அனுப்பினார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்கள்.

லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக அரசின் அதிகார வரம்புக்குள் இருப்பதால், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி தி.மு.க. சார்பில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.

அதன்பேரில் குட்கா ஊழல் விவகாரத்தில் பெயர்கள் குறிப்பிடாமல் கலால்துறை, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். எனினும் விசாரணை தொடங்கப்படாமல் இருந்ததால் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி குட்கா ஊழல் விவகாரத்தில் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என்று சென்னை மற்றும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு தி.மு.க. சார்பில் கடிதம் அனுப்பி வலியுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி கடந்த வாரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் மாதவராவ் ஆஜராகினார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் குட்கா விற்பனைக்காக யார்-யாருக்கு? எவ்வளவு லஞ்ச பணம் கொடுக்கப்பட்டது? என்பன போன்ற விவரங்களை தெரிவித்தார்.



லஞ்சம் பெற்றவர்கள் பட்டியலில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணாவின் பெயரையும் அவர் குறிப்பிட்டதாக தகவல் வெளியானது.

மாதவராவ் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், கலால் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது.

அதன்படி நேற்று ஒரே நாளில் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, கர்நாடக மாநிலம் பெங்களூரு, மராட்டிய மாநிலம் மும்பை, ஆந்திர மாநிலம் குண்டூர் ஆகிய ஊர்களில் உள்ள 35 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனை நடத்துவதற்காக சென்னை வந்திருந்த 120 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் பெசன்ட் நகரில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கும் விடுதியில் முகாமிட்டு இருந்தனர். நேற்று அவர்கள் சோதனையில் இறங்கினார்கள்.

அவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து காலை 7 மணி அளவில் சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு, சென்னை முகப்பேர் ஏரித்திட்டம் 8-வது குறுக்கு தெருவில் உள்ள தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடு, மயிலாப்பூரில் உள்ள அவரது அலுவலகம், சென்னை நொளம்பூரில் உள்ள முன்னாள் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் வீடு, அண்ணா நகர் கிழக்கு டபிள்யூ பிளாக்கில் உள்ள முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு, சென்னை தியாகராயநகரில் உள்ள மதுரை ரெயில்வே டி.எஸ்.பி. மன்னர் மன்னன் ஆகியோரின் வீடுகளுக்கு சென்றனர்.

சோதனை நடத்துவதற்கான வாரண்டை காண்பித்து வீடுகளுக்குள் சென்று சோதனை மேற்கொண்டனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.



மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனின் அலுவலகத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

தனது வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றதால், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று அலுவலகம் செல்லவில்லை.

அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், ரெயில்வே டி.எஸ்.பி. மன்னர் மன்னன் ஆகியோரின் வீடுகளில் மாலை 6 மணி அளவில் சோதனை நிறைவுபெற்றது.

இந்த சோதனை வளையத்துக்குள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் டாக்டர் செந்தில் முருகன், டாக்டர் லட்சுமி நாராயணன், சிவகுமார், மத்திய கலால் வரி அதிகாரிகள் குல்சர் பேகம், என்.கே.பாண்டியன், சேஷாத்ரி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்குமார், லட்சுமி நாராயணன், சிவகுமார் ஆகியோரின் வீடுகள், கலால் வரித்துறை அதிகாரிகள் குல்ஜா பேகம், ஆர்.கே.பாண்டியன், சேஷாத்ரி ஆகியோரின் வீடுகள், விற்பனை வரித்துறை அதிகாரிகள் பன்னீர்செல்வம், குறிஞ்சி செல்வம், கணேசன், குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரது வீடுகளும் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியானது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பெருமாள்புரம் போலீஸ் குடியிருப்பில் உள்ள தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் வீட்டில் நேற்று காலை 7.30 மணி முதல் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக மதுரையில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் சோதனை நடத்தினார்கள். அப்போது சம்பத், அவருடைய மனைவி அகல்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். மாலை 5.30 மணி அளவில் சோதனை முடிவடைந்தது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை 2 துணிப்பைகளில் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சம்பத் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்துக்கு இடமாறுதலாகி சென்றார். கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு மீண்டும் இடமாறுதல் செய்யப்பட்டு தற்போது தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இன்ஸ்பெக்டர் சம்பத்தின் மனைவி அகிலாவின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

35 இடங்களில் நடைபெற்ற சோதனையின் போது என்னென்ன ஆவணங்கள் சிக்கின? என்பது போன்ற அதிகாரபூர்வ தகவல் எதுவும் சி.பி.ஐ. தரப்பில் வெளியிடப்படவில்லை. 

மேலும் செய்திகள்