மாநில செய்திகள்
கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்றஅபிராமியின் பலவிதமான ‘டப்ஸ்மாஷ்’ வீடியோக்கள் வெளியாயின

கள்ளக்காதலுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற அபிராமியின் பலவிதமான ‘டப்ஸ்மாஷ்’ வீடியோக்கள் வெளியாயின.
சென்னை,

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த வங்கி ஊழியரின் மனைவி அபிராமி (வயது 25). பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் (28) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு, தனது குழந்தைகள் அஜய் (7), கார்னிகா (4) ஆகியோரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். போலீசார் அபிராமியையும், அவரது கள்ளக்காதலன் சுந்தரத்தையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அபிராமி குழந்தைகளை கொலை செய்வதற்கு முன்பு கணவர், குழந்தைகளுடன் ஒரு வணிகவளாகத்தில் சந்தோஷமாக எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இப்படி இருந்தவருக்கு எப்படி தான் குழந்தைகளை கொலை செய்ய மனசு வந்ததோ என்ற கருத்தும் வெளியானது.

‘டப்ஸ்மாஷ்’

அபிராமியின் செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ‘ஒரு கரண்டி பிரியாணி அதிகமா கொடுக்கிறவன் மேல காதல் வருது - மொத்த பிரியாணிக்கும் காசு கொடுக்கிறவனுக்கு விஷம் வைக்கிறாங்க’ என்பது போன்ற கருத்துகளும் பரவியது.

சினிமாவில் வரும் பாடல் வரிகள், பிரபலமான வசனங்கள் போன்ற காட்சிகளுக்கு ‘டப்ஸ்மாஷ்’ மூலம் அபிராமி தானே நடித்து அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்போது அந்த ‘டப்ஸ்மாஷ்’ வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வீடியோவில் அபிராமியிடம் வாலிபர் ஒருவர் ‘ஐ லவ் யூ’ கூறுவது போலவும்... அதற்கு இவர், எனக்கு உன்னை புடிக்கல, நீ எனக்கு அண்ணன் மாதிரி என்று பதில் கூறுவது போலவும் காட்சிகள் உள்ளன.

கண் சிமிட்டல்...

நடிகர் வடிவேலுவை பார்த்து ஒரு நடிகை பேசும் ‘உனக்கு என்னடா மரியாதை, டால்டா...’ என்ற வசனத்துக்கும் அபிராமி நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மற்றொரு வீடியோவில் ‘என்னவளே... என்னவளே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடித்துள்ளார். இதுபோன்ற பல வீடியோக்கள் இப்போது ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’ போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

இதில் அபிராமி கண்களை சிமிட்டுவது, உதட்டை கடிப்பது, நாக்கை கடிப்பது, வெட்கப்படுவது என பலவிதமாக நடித்துள்ளார். இந்த வீடியோக்களை பார்த்த பலரும் மீண்டும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.