மக்கள் நலத்திட்டங்களை கவர்ச்சி திட்டங்களாக கருதக்கூடாது எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை கவர்ச்சி திட்டங்களாக கருதக்கூடாது என்று 15-வது நிதிக்குழுவிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-09-06 22:30 GMT
சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசுடன் 15-வது நிதிக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதற்கான கூட்டம், தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடி கூட்ட அரங்கத்தில் நடந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசுத் துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:- நிதிக்குழுவை எப்போதுமே தீவிரமாக ஆதரிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. திட்டக் கமிஷன் இருந்த காலங்களில் கூட, மத்தியில் இருந்து மாநிலங்களுக்கு நிதியை பெற்றுத்தருவதில் நிதிக்குழுதான் முக்கிய ஆதாரமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால் கடந்த அனைத்து நிதிக் குழுக்களின் மூலம், தமிழக அரசின் அதிகாரப் பகிர்வின் பங்கு குறைந்துகொண்டே வருகிறது. 14-வது நிதிக்குழுவின் மூலம் மத்திய வரிகளின் பங்களிப்பு 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்ந்தாலும், தமிழகத்துக்கு எந்த உபயோகமும் இல்லாமல் போய்விட்டது.

ஏனென்றால், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய அதற்கு இணையான நிதிப்பங்களிப்பு வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டது. 14-வது நிதிக்குழுவின் மூலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தற்போதுள்ள நடைமுறைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

15-வது நிதிக்குழுவின் மரபுகளில் சில அம்சங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக ஏற்கனவே நிதிக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். அதையே மீண்டும் வலியுறுத்துகிறேன்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை 15-வது நிதிக்குழு பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். சொந்த முயற்சியால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு இது தண்டிப்பதாக அமைந்துவிடும். அதிகாரப் பகிர்வு காரணங்களுக்காக 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நிதிக்குழு எடுத்துக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் முக்கிய திட்டங்களை அமல்படுத்துவதில் சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கான ஊக்கத்தொகை அளிக்கும் அம்சங்களில் எங்களுக்கு இன்னும் மிகுந்த கவலைகள் உள்ளன.

சில பிரபலமான மக்கள் நலத்திட்டங்களுக்கான செலவைக் குறைக்க வேண்டும் என்று கூறியிருப்பதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். இதை கவர்ச்சித் திட்டங்களாக நிதிக்கமிஷன் கருதக்கூடாது. பள்ளிக்குழந்தைகளுக்கான எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் என்பதும் ஒரு காலத்தில் கவர்ச்சித் திட்டமாக கருதப்பட்டது. தற்போது அதை தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு பிரிவாக ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஏராளமான சமூகநலத் திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு திட்டமும் சமூக-பொருளாதார கண்ணோட்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட நலிவுற்ற பிரிவினரின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே அவற்றை கவர்ச்சித் திட்டங்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. மாநில அரசின் இதற்கான நடவடிக்கைகளைப் பற்றி நிதிக்குழு தீர்மானிக்க முடியாது. முந்தைய நிதிக்குழுவின் பரிந்துரைகளால் சலுகைகள் கிடைக்காமல் போயுள்ளன. இதனால் தமிழகத்தின் வளர்ச்சி தடைபடுகிறது.

இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தமிழகம் போன்ற வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதற்காக முதலீடு செய்வதற்கு தமிழகத்துக்கு நிதி தேவைப்படுகிறது.

வளர்ச்சி இல்லாவிட்டால் பகிர்தலுக்கு ஒன்றும் இருக்காது. எனவே வளர்ச்சி மற்றும் மறு பகிர்தல் விவகாரத்தில் சமநிலையை உருவாக்க வேண்டும். நிதியை முழுமையாக மத்திய அரசு பகிரவில்லை என்று தணிக்கைத் துறைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழகம் அதிக நிதியை இழந்திருக்கிறது.

இதுபோன்ற பகிரப்படாத நிதி பற்றி ஆய்வு செய்து அதை தமிழகத்துக்கு உடனே வழங்கும்படி பரிந்துரைக்க வேண்டும். நீண்ட காலத்துக்குப் பிறகு இந்த நிதிக்குழு, அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் உள்ள ஒருவரால் தலைமையை பெற்றுள்ளது.

இந்த நிதிக்குழுவை தமிழகத்தின் 8 கோடி பேரும் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்குகின்றனர். இந்த திறமைமிக்க நிதிக்குழுவினர் நிச்சயமாக தமிழக மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மேலும் செய்திகள்