நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களுக்குள் அகற்றவேண்டும் என்றும், இதற்கு தகுந்த பாதுகாப்பை போலீஸ் கமிஷனர் வழங்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-09-06 20:35 GMT
சென்னை,

சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஆறுமுகம், கற்பகவள்ளி உள்பட 10 பேர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அயனாவரத்தில் உள்ள குளத்தை ஆக்கிரமித்து கடந்த 60 ஆண்டுகளாக வீடுகட்டி வசித்துவருகிறோம். எங்களுக்கு மின் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டு நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தில் எங்களுக்கு பட்டா வழங்கக்கோரி விண்ணப்பித்தும், அதிகாரிகள் பட்டா வழங்க மறுக்கின்றனர். எனவே அந்த திட்டத்தின்கீழ் எங்களுக்கும் பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், ‘அரசுக்கு சொந்தமான குளத்தில் மனுதாரர்கள் வசிப்பதால் பட்டா வழங்க முடியாது’ என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசு நிலத்தையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. எனவே குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு இலவச பட்டா வழங்க உத்தரவிட முடியாது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது.

அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டால், ஒருசில பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டும் அதிகாரிகள் அகற்றுகின்றனர். இதனால் மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிப்பு முளைத்துவிடுகிறது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மனித தவறே காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனப்போக்குடன் செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது. நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதை ஐகோர்ட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிவிட்டு, அவர்கள் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அப்படி செய்தால்தான், மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடராது. இனிவரும் காலங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கமுடியாது என்ற நிலைப்பாட்டை அரசு நிர்வாகம் எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக வருவாய் துறை செயலாளரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். 2 வாரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்தி, சென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களுக்குள் அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் மீது சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் குற்றவியல் மற்றும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்