மாநில செய்திகள்
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் முதல்-அமைச்சர் கடிதம் எழுதி இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்தார்.
சென்னை,

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற உயர்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை குஜராத்தி மொழியில் எழுதலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, அந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னை வேப்பேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி உள்பட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வுகள் கடந்த காலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது.

தற்போது அந்த நுழைவு தேர்வுகளை குஜராத்தி மொழியிலும் தேர்வு எழுதலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. குஜராத்தி மொழியை போன்று மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் தமிழில் நுழைவு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆசிரியர்களுக்கான தகுதி (டெட்) தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தேர்வு நியமன தேர்வு அல்ல, நியமன தேர்வு தனியாக நடத்தப்படும்.

டெட் தேர்வை வைத்தே ஆசிரியர் நியமனத்தை நடத்த வேண்டும் என்று சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கை முறையாக எதிர்கொண்ட பின் நியமன தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

பள்ளிக்கல்வி துறையில் உள்ள காலியிடங்களை கருத்தில் கொண்டு, டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடங்களே பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நிரப்பி கொள்ள தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் மூலம் மாதம் ரூ.7 ஆயிரத்து 500 சம்பளத்தில் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வழி வகுக்கும். இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.