மாநில செய்திகள்
செங்குன்றம் முன்னாள் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு ‘சீல்’ சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை ராயபுரம் போலீஸ் குடியிருப்பில் உள்ள செங்குன்றம் முன்னாள் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
சென்னை,

சென்னை செங்குன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சம்பத். தற்போது அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி போலீஸ் குடியிருப்பில் தங்கி, ‘சிப்காட்’ போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

குட்கா ஊழல் குற்றச்சாட்டில் சம்பத் பெயரும் அடிப்பட்டதால் சி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனை வளையத்துக்குள் அவர் கொண்டு வரப்பட்டார். அதன்படி ஆறுமுகநேரியில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சம்பத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் உள்ள போலீஸ் குடியிருப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை காலி செய்யாமல் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆறுமுகநேரியில் விசாரணை நடத்திய அதிகாரிகள் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ராயபுரம் போலீஸ் குடியிருப்புக்கு சென்றனர்.

அங்கு சம்பத் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதற்கான நோட்டீசையும் வீட்டின் முன்பு ஓட்டினர். சம்பத் அரசு வழங்கிய வீட்டை காலி செய்யாமல் முறைகேடாக பயன்படுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை செங்குன்றத்தில் சம்பத் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது, போலீஸ் நிலையத்தில் வழக்கில் சிக்கிய வாகனங்களை எடைக்கு போட முயன்ற குற்றச்சாட்டில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.