குட்கா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்

குட்கா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Update: 2018-09-06 22:45 GMT
சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குட்கா ஊழல் புகார் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் உள்பட பல இடங்களில் சி.பி.ஐ. சோதனையை நடத்தி இருக்கிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் வீட்டுக்குள் புகுந்து, ஊழல் குற்றச்சாட்டின்பேரில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதுமில்லை. அப்படி நடந்தபின்பு அவர் அமைச்சர் பதவியில் நீடித்ததாகவும் எனக்கு நினைவில் இல்லை. ஆனால், இப்படி ஒரு சோதனை நடந்து, ஒட்டுமொத்த தமிழகமும் தலைகுனிவை சந்தித்தபிறகும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கூட உணர்ச்சிகளை காட்டாமல் இருந்ததில் எனக்கு வியப்பில்லை.

அரசியலில் அவ்வப்போது கடைபிடிக்கப்படும் தார்மீக நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகி இருக்க வேண்டும் அல்லது எடப்பாடி பழனிசாமியாவது அவரை பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டுமே நடக்கவில்லை.

சி.பி.ஐ.யின் இந்த சோதனை ஏதோ, மத்திய பா.ஜ.க. அரசின் ஆலோசனைப்படி நடப்பதாக சிலர் நம்புகிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அவர்கள் இன்னமும் எடப்பாடி அரசை தாங்கிப் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதல்படி இந்த குட்கா விவகாரத்தில் களம் இறங்கியிருக்கும் சி.பி.ஐ.யின் விசாரணையை, கோர்ட்டு தனது மேற்பார்வை வளையத்துக்குள் கொண்டுவந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

அத்துடன், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் 4 அமைச்சர்கள் மீதான லஞ்ச ஊழல் புகார்களை, அவர்களின் நிர்வாகத்தின் கீழுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிப்பது நம்பகத்தன்மையற்றது.

எனவே அந்த வழக்குகளை நேர்மையான ஓர் அதிகாரியின் தலைமைக்கு மாற்றி, சென்னை ஐகோர்ட்டு அதைத்தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்