மாநில செய்திகள்
கடந்த நிதிக்குழு பரிந்துரையால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வேண்டும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு

கடந்த நிதிக்குழுவின் பரிந்துரைகளால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவேண்டும் என்று 15-வது நிதிக்குழுவிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார்.
சென்னை,

தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் மத்திய 15-வது நிதிக்குழுவிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பொருளாதார ஏற்ற இறக்கங்கள் நிலவும் சூழ்நிலையில் மக்களை பாதுகாப்பதற்காக, நிதியளிப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதற்கு மாநில அரசு தள்ளப்பட்டுள்ளது.

14-வது நிதிக்குழு காலகட்டத்தில் தமிழக அரசு நிதிப்பற்றாக்குறையில் இருந்தபோதிலும், இழப்பீட்டையோ அல்லது வருவாய் பற்றாக்குறை மானியத்தையோ தமிழகம் பெறவில்லை. இந்த விஷயத்தில் தமிழகத்துக்கு எதிராக 14-வது நிதிக்குழு பெரிய தவறை இழைத்துவிட்டது.

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே நேர்மையான நிதிப்பகிர்வை 15-வது நிதிக்குழு ஏற்படுத்த வேண்டும். வளரும் மாநிலங்களுக்கு முதலீடுகள் கிடைக்காமல்போனால், தேசத்தை முன்னெடுத்துச் செல்லும் இதுபோன்ற மாநிலங்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டுவிடும்

15-வது நிதிக்குழு தனது பரிந்துரைகளை இறுதிசெய்வதற்கு முன்பு தமிழகம் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகளை கருத்தில்கொள்ள வேண்டும். மாநிலங்களில் நிலவுகின்ற நிதி ஆதாரங்களைவிட அதிகமாக பொறுப்புகள் வழங்கப்படும் அடிப்படை ஏற்றத்தாழ்வை நிதிக்குழு சரிசெய்ய வேண்டும். மாநிலங்களின் வருவாய் மற்றும் செலவினங்களைப் பற்றிய நம்பிக்கையைவிட, மாநிலத்தில் நிலவும் எதார்த்தமான பொருளாதார நிலையை கவனிக்க வேண்டும்.

விரைவான பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களின் மீது அதிக கவனம் செலுத்துவதற்கு பின்தங்கிய மாநிலங்களை ஊக்குவிப்பதைவிட, வளர்ச்சியடைந்த மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைக்கு உகந்த, நியாயமான மற்றும் விஞ்ஞான முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

14-வது நிதிக்குழுவின் நியாயமற்ற பரிந்துரையால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு ஈடுகட்டப்பட வேண்டும். சென்னை உள்பட மாநகரங்களின் பொருளாதார முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு தமிழகத்தின் தேவைக்காக ரூ.4,800 கோடி மானியம் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் கடலோர கடற்பரப்பில் கடல் நீர் ஊடுருவல் தடுப்புக்கு ரூ.260 கோடி வழங்க வேண்டும். கடல் அரிப்பு தடுப்புப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். கிழக்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டுக்காக ரூ.1,900 கோடி நிதி தேவைப்படுகிறது. பொது சுத்திகரிப்பு மையங்களின் விரிவாக்கத்துக்காக சிறப்பு மானியமாக ரூ.5 ஆயிரம் கோடி, சென்னையில் உள்ள நீர்நிலைகளை புதுப்பிப்பதற்காக ரூ.300 கோடி அளிக்கப்பட வேண்டும்.

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நகரங்களான ராமேசுவரம், மதுரை, பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக முறையே ரூ.300 கோடி, ரூ.500 கோடி, ரூ.100 கோடி, ரூ.75 கோடி, ரூ.100 கோடி நிதி கொடுக்க வேண்டும்.

காவிரி - அக்னியாறு - தெற்கு வெள்ளாறு - மணிமுத்தாறு - வைகை - குண்டாறு கால்வாய் திட்டத்தின்கீழ் அவற்றை இணைப்பதற்காக ரூ.7,800 கோடி மானியம் அளிக்க வேண்டும்.

வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ள பழமையான கோவில்களை புனரமைக்க ரூ.400 கோடி நிதி வேண்டும். தமிழகத்தில் உள்ள 58,326 தனிச்சாலைகள், நடுத்தர சாலைகள், இருவழிச் சாலைகள், பல வழிச்சாலைகள் ஆகியவற்றின் பராமரிப்புக்காக ரூ.23,465 கோடி மானியம் தரப்பட வேண்டும்.

30,952 சதுர கி.மீ. வனப்பகுதி பராமரிப்புக்காக ஆயிரம் கோடி ரூபாய்; காவல்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.7,875 கோடி; நீதிமன்ற கட்டுமானம் உள்பட நீதித்துறை மேம்பாட்டுக்கு ரூ.1,500 கோடி; நகர்மயமாதல், குடிசைப்பகுதி மேம்பாடு ஆகியவற்றை எதிர்கொள்ள ரூ.5 ஆயிரம் கோடி;

பாரம்பரிய நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்காக ரூ.1,500 கோடி; சுகாதார நிலையங்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய்; பழைய அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்களை புதுப்பிக்கவும், புதிய கட்டிடங்கள் கட்டவும் ரூ.600 கோடி; நோயாளிகள் நலனுக்காக தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.400 கோடி;

சென்னையில் உள்ள ஐகோர்ட்டு, புனிதஜார்ஜ் கோட்டை, அரசு அருங்காட்சியகம், கலச மஹால், பொதுப்பணித்துறை கட்டிடங்கள், ஹுமாயூன் மஹால் ஆகிய பாரம்பரிய கட்டிடங்களை புதுப்பிப்பதற்காக ரூ.250 கோடி; சிறார் நீதிமன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.80 கோடி; உள்ளாட்சி மன்றங்களின் கட்டிட பராமரிப்புக்காக ரூ.6 ஆயிரம் கோடி மானியத் தொகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.