மாநில செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலக வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி

அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் தாமாக முன்வந்து பதவிவிலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குட்கா விவகாரத்தை முதன்முதலில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் தான் எழுப்பினேன். அதை எழுப்பிய காரணத்திற்காகவே எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஆட்சியாளர்கள் ஒரு தீர்மானத்தையும் கொண்டு வந்து அது இன்றைக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்பது நாட்டிற்கு நன்றாக தெரியும்.

அமைச்சராக இருக்கக்கூடிய விஜயபாஸ்கர் மீதும் அதேபோல் காவல்துறையினுடைய தலைமை அதிகாரியாக தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய டி.ஜி.பி. ராஜேந்திரன் மீதும் வருமான வரித்துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பல இடங்களில் சோதனைகளை நடத்தப்பட்டு இருக்கிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்திலும், அவருடைய உறவினர்கள், நண்பர்கள் இல்லத்திலும் மற்றும் அவரது அலுவலகங்களிலும், டி.ஜி.பி.யாக இருக்கக்கூடிய ராஜேந்திரனுடைய அலுவலகம் மற்றும் அவருடைய வீடுகளில் எல்லாம் சி.பி.ஐ. அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினுடைய தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய டி.ஜி.பி.யின் இல்லத்திலும் அவரது அலுவலகத்திலும் சோதனையிடப்படுவது இதுதான் முதல் முறை.

ஆகவே, உடனடியாக அவர்கள் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில், தமிழக அரசும், முதல்-அமைச்சரும் உடனடியாக இவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இப்பொழுது சில பேரை கைது செய்திருப்பதாக செய்திகள் வந்திருக்கிறது. உடனடியாக இதில் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடிய டி.ஜி.பி. ராஜேந்திரனையும் கைது செய்ய வேண்டும். அதேபோல, அமைச்சராக இருக்கக்கூடிய விஜயபாஸ்கரையும் கைது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய அசைக்க முடியாத கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.