மாநில செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு, புதிய உச்சம் தொட்டது

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றிற்கு ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. 

அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது. கால்டாக்சி கட்டணமும் உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது. 

இந்த நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.