மாநில செய்திகள்
முதல்வர் பழனிசாமி மீதான புகார் - லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் அவகாசம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு தொடர்பாக பதில் அளிக்க செப்டம்பர் 12-ம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. #EdappadiPalaniswami
சென்னை:

சாலை அமைக்கும் பணிகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் வரையிலான 70.20 கிலோ மீட்டர் தூரத்திற்கு உலக வங்கியின் நிதி உதவியுடன் நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.713.34 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. பின்னர், அந்த மதிப்பு ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த பணி ராமலிங்கம் அன்ட் கோ என்ற கம்பெனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கம்பெனியின் இயக்குனர்களில் ஒருவரான சந்திரகாந்த் ராமலிங்கம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் குமாரின் நெருங்கிய உறவினர் ஆவார். இந்த திட்டப்பணியை தற்போதைய சந்தை நிலவரப்படி ரூ.200 கோடியில் முடித்து விடலாம். ஆனால் இதற்கு ரூ.1,515 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நெல்லை- செங்கோட்டை-கொல்லம் வரையிலான 45.64 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.900 கோடி ரூபாய்க்கு ‘வெங்கடாசலபதி அன்ட் கோ’ என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளரான பி.சுப்பிரமணியம், எடப்பாடி பழனி சாமியின் சம்பந்தி ஆவார்.

அதாவது பி.சுப்பிரமணியத்தின் மகளைத்தான் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்குமார் திருமணம் செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரரான எஸ்.பி.கே. குழுமத்தின் நாகராஜன் செய்யாத்துரை முதல்-அமைச்சரின் பினாமி ஆவார். இந்த திட்டத்தை ரூ.130 கோடியில் முடித்துவிடலாம். ஆனால் ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

27 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதுரை ரிங் ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற சென்னை பாலாஜி டோல்வேய்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ரூ.218.57 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி பி.சுப்பிரமணியம், பினாமி நாகராஜன் செய்யாத்துரை மற்றும் சேகர் என்ற சேகர் ரெட்டி ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர்.

வண்டலூர்-வாலாஜா இடையிலான நான்கு வழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற எஸ்.பி.கே. குழுமத்துக்கு ரூ.200 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்களில் சாலை பராமரிப்பு பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒப்பந்தம் எஸ்.பி.கே. மற்றும் வெங்கடாசலபதி அன்ட் கோ நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தகுதியான ஒப்பந்தகாரர்களுக்கு நெடுஞ்சாலைத்துறையில் பணி வழங்கப்படாமல் மேற்கண்ட நிறுவனங்களுக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. இதில், வெளிப்படையான டெண்டர் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன.

மேற்கண்ட ஒப்பந்தங்களின் மூலம் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளாக செயல்பட்டவர்களுக்கு ரூ.4,833.57 கோடிக்கு நெடுஞ்சாலை பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர கடந்த 7 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்களான ராமலிங்கம் மற்றும் சுதர்மா ஆகியோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பொது ஊழியரான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சம்பந்தி பி.சுப்பிரமணியம் மற்றும் நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம், பினாமி நாகராஜன் செய்யாத்துரை மற்றும் சேகர் ரெட்டி ஆகியோருக்கு சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கி உள்ளார். ஆதாயம் அடையும் நோக்கில் அவர் இதுபோன்று செயல்பட்டுள்ளார்.

ஒப்பந்த பணிகளை ஒதுக்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. எனவே, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீதும், தொடர்புடைய மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 13.6.2018 அன்று ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனருக்கு புகார் அனுப்பினேன். அவர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, நான் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விசாரணைக்கு வந்தது அப்போது. ஊழல் புகார் பற்றி எடப்பாடி பழனிசாமி  மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என 
சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பை சுட்டிக்காட்டி மூத்த வக்கீல் என்.ஆர். இளங்கோ வாதிட்டார்.

முதலமைச்சர் மீதான புகார் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என  தமிழக அரசு சார்பில்  தகவல் தெரிவிக்கபட்டது. 

மேலும், முதல்வர் மீதான புகாருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று நீதிபதி கேள்வி கேட்டதற்கு, கடந்த ஜூன் 22ம் தேதியே விசாரணை தொடங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளித்துள்ளது.

முதலவர் மீது  2 மாதம் முன்பு தொடங்கிய விசாரணை இன்னும் முடியவில்லை. 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்?  என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

திமுக தொடர்ந்த வழக்கு குறித்து செப்.3க்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.

 இவ்வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்த வரைவு அறிக்கையை ஊழல் தடுப்புப்  பிரிவு இயக்குனருக்கு அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவருடைய ஒப்புதலுக்கு பிறகு ஐகோர்ட்டில்  அந்த அறிக்கையை தாக்கல் செய்வதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வருக்கு எதிரான வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 12-ம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவகாசம் அளித்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.