மாநில செய்திகள்
முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று முதல்வர் பழனிசாமியை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார்.
சென்னை,

சென்னை செங்குன்றத்தில் இயங்கி வந்த ‘குட்கா’ ஆலையில் 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆலை உரிமையாளர் மாதவராவின் ரகசிய ‘டைரி’ அதிகாரிகள் கையில் சிக்கியது. அதில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை தயாரிப்பதற்கும், தமிழகம் முழுவதும் விற்பனை செய்வதற்கும் ரூ.40 கோடி லஞ்சம் கைமாறிய தகவல் இடம் பெற்றிருந்தது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. தொடர்ந்த மனு மூலம் ‘குட்கா’ ஊழல் வழக்கு சி.பி.ஐ. வசம் கை மாறியது. ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று சி.பி.ஐ. ஏப்ரல் 26-ந் தேதி வழக்குப்பதிவு செய்தது. இதனால் இந்த வழக்கு விசுவரூபம் எடுத்தது. ஊழல் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் திரட்டி இருந்த ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர்.

அதன் அடிப்படையில் ‘அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், மதுரை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு மன்னர் மன்னன், தூத்துக்குடி ‘சிப்காட்’ இன்ஸ்பெக்டர் சம்பத், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், லட்சுமி நாராயணன், சிவகுமார், மத்திய கலால்துறை அதிகாரிகள் குல்சர்பேகம், என்.கே.பாண்டியன், சேஷாத்ரி, விற்பனை வரித்துறை அதிகாரிகள் பன்னீர்செல்வம், குறிஞ்சிசெல்வம், கணேசன் ஆகியோரது வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் உள்பட 35 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடு மற்றும் அலுவலகம் உள்பட பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினமே சி.பி.ஐ. சோதனை நிறைவுக்கு வந்தது. முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் வீட்டில் நேற்று காலை சோதனை முடிந்தது.

இதையடுத்து சோதனையில் சிக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகிய 5 பேரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். விசாரணை முடிவில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 25 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். அவர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சோதனை நடத்தியதையடுத்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

தனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்ததும் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சந்தித்துப் பேசினார். அப்போது சிபிஐ சோதனை குறித்த விவரங்களை தெரிவித்ததாகவும், தன்னை டிஜிபி பதவியில் இருந்து விடுவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, டிஜிபி மாற்றம் செய்யப்பட்டால் அடுத்த சீனியாரிட்டி பட்டியலில் கே.பி.மகேந்திரன், ஜாங்கிட், ஜே.கே.திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் உள்ளனர். இதில் ஜே.கே.திரிபாதி டிஜிபியாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில்  இன்று முதல்வர் பழனிசாமியை  அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடம் நடைபெற்றது.