திமுகவிலிருந்து தன்னை நீக்கியது யார்? திமுகவிற்கு இனி நான் தான் சவால் - மு.க.அழகிரியின் பரபரப்பு பேட்டி

திமுகவிலிருந்து தன்னை நீக்கியது யார்?, திமுகவிற்கு இனி சவால் என்ன? என பல சுவாரஸ்ய பதில்களை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-07 11:35 GMT
சென்னை

அழகிரி சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் பேரணியும் நடத்தினார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டி அளித்த மு.க அழகிரியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி : உங்கள் அரசியல் பயணம் எப்போது தொடங்கியது? நீங்கள் அரசியல் ஜாம்பவான் கருணாநிதியின் வீட்டில் வளர்ந்தவர். அரசியல் என்பது உங்கள் வாழ்வின் வழியாக சிறுவயது முதலே இருந்ததா?

அழகிரி : நான் எல்லாத்தையும் என் அப்பாவிடம் தான் கற்றுக்கொண்டேன். எனக்கு 6 வயது இருக்கும்போது, என் தந்தை குளித்தலை தொகுதியில் நின்று மாபெரும் வெற்றி பெற்றார். 15 பேரில் ஒருவராக அவர் ஜெயித்தார். அதன்பின்னர் 1962 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரிசுத்த நாடார் என்ற தேர்தல் புலியை எதிர்த்து என் தந்தை போட்டியிட்டார். அப்போது நாங்கள் எல்லாம் அவருடன் தங்கியிருந்தோம். தந்தையின் நண்பர் தங்கமுத்து என்பவரின் வீட்டில் தங்கியிருந்தோம். அந்த சமயம் தான் எங்களுக்கு அரசியல் அனுபவம் கிடைத்த தருணம். அந்த காலத்தில் அப்பாவுடன் இருந்து, அப்பாவிற்காக ஓட்டுகள் கேட்போம். அங்கிருந்து தொடங்கியது தான் என் அரசியல் வாழ்க்கை. அதன்பின்னர் வந்த தேர்தல்களிலும் அப்பாவின் அரசியலை பார்த்துப் பார்த்து நாங்கள் முழுநேர அரசியல்வாதிகளானோம்.

கேள்வி : உங்கள் தந்தையிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட அரசியல் பாடம் என்ன?

அழகிரி : அவருடைய உழைப்பு, சுயமரியாதை. அவர் தூங்காமல் உழைக்கக்கூடியவர்.

கேள்வி : உங்களுடன் கருணாநிதி இருந்த தருணங்களில் சுவையான நினைவுகள் எது?

அழகிரி : நாங்கள் சிறுவயதில் கேரம்போர்டு, கிரிக்கெட் போன்றவை விளையாடுவோம். அதில் அவரும் சிறுபிள்ளைபோல் வந்து கலந்துகொள்வார். ஒருமுறை என்னை, எனது அண்ணனையும் (மு.க.முத்து) அழைத்துக்கொண்டு திரைப்படத்திற்கு சென்றார். கண் திறந்தது என்ற படத்திற்கு சென்றோம். நான் அப்போது 8-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். கண்ணாடி அணியும் பழக்கம் அப்போது எனக்கு இல்லை. அதனால் படம் பார்க்கும்போது கண்ணை சுருக்கி சுருக்கிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதை தந்தை கவனித்துவிட்டார். அடுத்தநாளே கண்மருத்துவரிடம் என்னை அழைத்துச்சென்று எனது கண்ணை பரிசோதித்து கண்ணாடி பொருத்திவிட்டார். அப்போது எனக்கு நாங்கள் சென்ற படத்தின் தலைப்பு தான் நினைவிற்கு வந்தது. சென்ற படமும்  கண் திறந்தது

கேள்வி : உங்களை 2014ல் பதவிநீக்கம் செய்தபோது எப்படி இருந்தது?

அழகிரி : ரொம்ப கஷ்டமாக இருந்தது. நாம் எந்த தப்பும் பண்ணவில்லையே என்று வருந்தினேன். தொண்டர்களுக்காக பாடுபாட்டேன். சில குறைகளை கூறினேன். சில ஆதாரங்களை எடுத்துச்சென்று காட்டினேன். அதனால் அவருக்கு என்னை நீக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. பொதுச்செயலாளருக்கு கூட அந்த எண்ணம் கிடையாது.

கேள்வி : அப்ப யாரு நீக்கியது ?

பதில்: அதில் பல சதிகள் இருக்கிறது. சில பேருக்கு நான் வளர்ந்து விடப்போகிறேனோ என்ற எண்ணம் இருந்தது. ஜெயலலிதா இருக்கும்போதே நான் எதிர்த்து பல வெற்றிகளை பெற்றவன். என் மீது, எனது மனைவி, மகன் மீது பல வழக்குகளை தொடுத்தனர். நான் வளர்ந்துவிடப்போகிறேன் என பயந்து தந்தையிடம் பேசி, மிரட்டும் தொணியில் ஈடுபட்டு பலரும் சேர்ந்து என்னை நீக்கச்செய்யுமாறு சதி செய்துவிட்டனர்.

கேள்வி : மீண்டும் தந்தையிடம் கட்சியில் சேர்த்துக்கொள்ளுமாறு கூறினீர்களா?

பதில்: ஆமாம். 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நேரில் சந்தித்து கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டேன். அவர் கொஞ்ச நாள் அமைதியாய் இருப்பா. மீண்டும் சேர்த்துக்கொள்கிறேன் எனக்கூறினார்.

கேள்வி : அதன்பின்னர் இறுதிவரை உங்களை கட்சியில் சேர்க்கவில்லையே. யாரேனும் தடுத்திருப்பார்களா?

அழகிரி : அதன்பின்னர் அவர் உடல்நிலை மோசமடைந்துவிட்டது. அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த சமயத்தில் கட்சியில் சேர்க்குமாறு கேட்டால் தொல்லையாக இருக்கும் என, உடல்நிலை குணமடையட்டும் என காத்திருந்தேன். ஆனால் அவர் கட்சியில் சேர்க்க வேண்டும் என நினைத்திருக்கலாம்.

கேள்வி : கடந்த 4 வருடங்களில் உங்களது அரசியல் செல்வாக்கு குறைந்துவிட்டதாக திமுக வட்டாரம் கூறுகிறார்களே?

பதில் : 4 வருடங்களாக கலைஞர் இருந்தார். அதனால் நான் அவருக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ எதையும் செய்யாமல் இருந்தேன். இருப்பினும் எனக்கு ஆதரவு குறைந்துவிட்டதா? இல்லையா? என்பது போகப்போக தெரியும். நான் நடத்திய பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

கேள்வி : பொதுக்குழுவும், கட்சியும் ஸ்டாலின் பக்கம் இருப்பதால் உங்கள் பேரணி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என திமுக வட்டாரங்கள் கூறுகின்றார்களே?

பதில்: பொதுக்குழு மட்டும் திமுக அல்ல. அவர்கள் கூறுவது தான் திமுகவா? அந்த பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையிலேயே ஜனநாயகம் இல்லை. அதைத்தான் நான் 2014ல் குற்றம்சாட்டினேன்.

கேள்வி : ஆர்.கே நகர் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என நினைத்தபோது, டெபாசிட் இழந்ததே அதை எப்படி பார்க்கின்றீர்கள்?

அழகிரி : தோல்விக்கு குருட்டுப்போக்கான நம்பிக்கை தான் காரணம் . ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் 57 ஆயிரம் ஓட்டுகள் வாங்கினார். அவரை மீண்டும் வேட்பாளராக்காமல் யாரையோ நிறுத்தினார்கள். ஜெயலிதாவை எதிர்த்தே 57 ஆயிரம் ஓட்டுகள் வாங்கிய திமுக, டிடிவி தினகரனை எதிர்த்து 24 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியது திமுகவின் சரிவு தான்.

கேள்வி : 2014 மக்களவை மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோல்வியடையவில்லையா ?

அழகிரி : மக்களவை தேர்தலிலும், சட்டப்பேரவை தேர்தலிலும் கலைஞருக்கு தெரியாமல் அவர்களாக வேட்பாளர்களை நியமித்தனர். கலைஞர் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் நிச்சயம் திமுக வெற்றி பெற்றிருக்கும்.

கேள்வி : கடைசி 2 வருடத்தில் உங்களை திமுகவில் சேர்க்கவிடாமல் யாராவது தடுத்திருப்பார்களா?

அழகிரி : கண்டிப்பாக இருந்திருக்கலாம். நான் வந்தால் மற்றவர்களைவிட எனக்கு ஆதரவு பெருகும் என முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் பயந்திருக்கலாம். அதனால் என்னை சேர்க்கவிடாமல் தடுத்திருக்கலாம்.

கேள்வி : உங்களை சேர்க்கவில்லை என்றால் திமுக பின்விளைவுகளை சந்திக்கும் என்கின்றீர்கள்? என்ன பின்விளைவுகள் அவை?

அழகிரி : நிச்சயமாக திமுக தேர்தல்களில் தோல்வியை தழுவும். இன்னும் கட்சியில் பின்னடைவை சந்திக்கும்.

கேள்வி: தமிழக அரசியலில் ஒரு புதிய சூழல் ஏற்பட்டுள்ளது. திமுகவிற்கு புதிய தலைவர் வந்துள்ளார். நீங்கள் திமுகவிற்கு இனி எது சவாலாக இருக்கும் என நினைக்கின்றீர்கள்?

அழகிரி :  இனிமேல் திமுகவின் சவால் மு.க.அழகிரிதான். கண்டிப்பாக.

கேள்வி : நீங்களும், ஸ்டாலின் பிரிந்திருப்பதால் திமுகவிற்கு பலவீனமாக அமையுமா?

பதி: நிச்சயம் பலவீனம் தான்.

கேள்வி : திருமங்கலத்திலும், திருவாரூரிலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அழகிரி இன்றி திமுக வெற்றி பெற முடியுமா?

பதில்: நிச்சயமாக முடியாது. வெற்றியா? இரண்டாம் இடத்திற்கு கூட வரமுடியாது. மூன்றாம் இடத்திற்கு தான் வருவார்கள். 4ஆம் இடத்திற்கு சென்றாலும் ஆச்சர்யம் இல்லை.

கேள்வி : திமுக இணைத்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றீர்கள். அவருடன் இணைந்து அரசியல் பணி செய்வீர்களா?

அழகிரி :  கண்டிப்பாக அதற்காகத்தானே கட்சியில் இணைத்துக்கொள்ளச் சொல்கிறேன். ஏற்கனவே நாங்கள் இணைந்து பணிபுரிந்துள்ளோம்.

கேள்வி : உங்கள் நண்பர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கவுள்ளார். அது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்? 

அழகிரி :  கண்டிப்பாக அடிமட்ட மக்களை கவரும் சக்தி அவரிடம் இருக்கிறது.

கேள்வி : ரஜினி கட்சி ஆரம்பித்தால் திமுகவில் உள்ளவர்கள் அங்கு செல்வார்களா?

அழகிரி :  ரஜினி எனது தந்தை மீது பிரியமுள்ளவர். அவரது ரசிகர்கள் திமுகவிலும் நிறைய பேர் உள்ளனர். அதனால் அவர் கட்சி தொடங்கினால் அவர்கள் அங்கு செல்வார்கள். வாய்ப்புண்டு.

கேள்வி : தற்போது உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் வந்தால் யார் வெற்றி பெறுவார்கள்? திமுக வெற்றி பெறுமா?

அழகிரி :  யாரு அதிக ஓட்டு வாங்குகின்றார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களை ஏன் கூறுகின்றீர்கள்? ; ஏன் என்னை நினைக்கக்கூடாதா? நீங்கள்.

மேலும் செய்திகள்